ஹஸ்ரத் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூய வெண்ணிற ஆடை அணிந்து வந்து,
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் நேருக்கு நேர் நெருங்கி அமர்ந்து,
இஸ்லாம் என்றால் என்ன?
ஈமான் என்றால் என்ன?
இஹ்ஸான் என்றால் என்ன?
உலக முடிவு நாள் எப்போது வரும்?
என்று நான்கு கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடையளித்த விதம், ஹதீஸ் கிரந்தங்களில் ஆரம்பப் பகுதியில் பதியப்பட்டுள்ளன.
எனவே மார்க்கத்துடைய நம்பிக்கை, சட்டதிட்டங்கள் என்ற அதில் கூறப்பட்ட மூன்று அம்சங்களும் ஸஹாபாக்களின் காலத்திலேயே தெளிவாக விளக்கப்பட்டு விட்டன. இமாம்கள் அவற்றை கிதாபுகளில் எழுதிப் பாதுகாத்து தந்துள்ளார்கள்.
ஆனால் அந்த ஹதீஸில் கூறப்பட்ட உலக முடிவு சம்பந்தமான நான்காவது விடயம் சம்பந்தப்பட்ட நூற்றுக் கணக்கான அடையாளங்கள் காலத்துக்கு காலம் வெளியாகி, நடந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான ஹதீஸுகளில் முன்னறிவித்தல் செய்யப்பட்ட தீய பயங்கரமான விடயங்கள் எல்லாம் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன.
மார்க்கத்தின் இந்த நான்காவது விடயம் பற்றி பல இமாம்களும் பல கிதாபுகளில் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.
யெமனைச் சேர்ந்த அஸ்ஸய்யித் அபூபக்கர் அல் மஷ்ஹூர் என்ற சம கால அறிஞர் கடைசிகால பித்னாக்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இம்ரான் ஹுஸைன் போன்ற இன்னும் பல அறிஞர்களும் உலக முடிவின் அடையாளங்கள் பற்றிய ஹதீஸ்களை ஆராய்ந்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாமும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நூற்றுக்கு மேற்பட்ட ஏராளமான ஹதீஸ் ஆதாரங்களை சேகரித்துள்ளோம். ஆனால் யார் ஆராய்ந்தாலும் இத்துறை ஆய்வின் உண்மைத் தன்மைகள் அந்த அடையாளங்கள் வெளியான பின்னரே நிரூபிக்கப்படக் கூடியதாக அமைந்துள்ளன.
அவற்றில் ஒன்று தான், இங்கே கூறப்படுகின்ற ஹதீஸும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்ற இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் இன்னும் பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
عن أبي هريرة أن رسول الله {صلى الله عليه وسلم} قال :
لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل مائة تسعة ٌ وتسعون ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو ومن حديث روح بن القاسم عن سهيل كذلك بنحوه وزاد فقال إن رأيته فلا تقربنه
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
" ' புராத் ' ( இராக்கில் உள்ள யுபிரட்டீஸ் என்ற நதி ) யில் ஒரு தங்க மலை வெளியாகும் வரை உலக முடிவு ஏற்படாது. அதனை எடுப்பதற்காக மனிதர்கள் யுத்தத்தில் ஈடுபடுவார்கள். அந்த யுத்தத்தில் ஈடுபடுவோரில் ஒவ்வொரு நூறு பேரிலும் 99 பேர் கொலை செய்யப்படுவார்கள். (அந்த யுத்தத்தில் ஈடுபடுவோரில்) ஒவ்வொருவரும் "நான் தப்பிக்க மாட்டேனா"? என்றே கூறுவார்கள். நீங்கள் (அந்த யுத்தத்தைக் கண்டுகொண்டால் அதளவில் நெருங்க வேண்டாம்"
இந்த ஹதீஸில் மூன்று தரப்பினரைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
1- அந்த தங்கத்தை எடுப்பதற்காக யுத்தம் செய்யும் ஒரு கூட்டம்
2- அதனை எடுப்பதற்காக அக்கூட்டத்தை எதிர்த்து யுத்தம் செய்யும் மற்றக் கூட்டத்தினர்.
3- நீங்கள் அந்த யுத்தத்தில் பங்குபற்ற வேண்டாம் என்று நல்லவர்களைப் பார்த்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் மூன்றாவது கூட்டம்.
சுமார் 1980 களில் நான் இந்த ஹதீஸை கேள்விப்பட்ட காலத்திலிருந்தே, இந்த யுத்தத்தில் பங்குபற்றும் இரண்டு பெரிய சக்திகளும் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். குவைத்தில் பல அறிஞர்களிடம் விசாரித்தேன்.
அமெரிக்காவும் ரஷ்யாவுமா? அமெரிக்காவும் சீனாவுமா? அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுமா? ஐரோப்பாவும் சீனா அல்லது ரஷ்யாவுமா? வஹாபிகளும் சீஆவுமா? இப்படி பல சந்தேகங்கள் எழுந்தன.
அதில் பங்குபற்ற வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது நேர்வழியில் உள்ளவர்களைக் குறித்தே என்பது எவருக்கும் விளங்கக் கூடியதே.
2011 இல் அரபு நாடுகளில் "அரபு வசந்தம்" என்ற பெயரில் , வஹாபி ஆயுதப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து இன்று வரை நடைபெறும் சம்பவங்களை உற்று நோக்கினால்,
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்த அந்த தங்கமலை யுத்தம் வஹாபிகளுக்கும் சீஆக்களுக்கும் இடையில்தான் நடைபெறப் போகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது. والله أعلم அல்லாஹ் மிக அறிந்தவன். இப்போதைய மத்திய கிழக்கு களநிலவரம் இப்படிச் சிந்திக்க வைக்கின்றது. இப்போதைய நிலை என்ன ?
ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடுகளான லெபனான், இராக், ஸிரியா என்ற நாடுகளை சீஆ சக்தியான ஈரான் தனது ஆளுகைக்குள் கொண்டவந்து விட்டன. யெமனையும் கைப்பற்ற போர் நடக்கின்றது.
கவாரிஜ் வஹாபி இயக்கங்கள் பெரும்பாலும் சகல அரபு நாடுகளிலும், குறிப்பாக லிபியா, ஸிரியா, இராக், யெமன், நைஜஜிரியா போன்ற நாடுகளில், இக்வான், ISIS, போகொஹராம், நுஸ்ரத் என்ற பல பெயர்களில் அரபு நாடுகளை வஹாபி ஆதிக்கத்துள் கொண்டுவருவதற்காக, உலக வரலாறே கண்டிராத கொடூரமான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமே அரபு நாடுகளில் பெரும் செல்வாக்க செலுத்தி வந்தன. ஆனால் இப்போது, மேற்கத்தைய நாடுகள் எல்லாம் வஹாபிகளுக்கு சார்பாகவும், ரஷ்யாவும் (மறைமகமாக சீனாவும்) சீஆ ஈரானுக்கு சார்பாகவும் யுத்தத்தில் குதித்துள்ளன.
ISIS ஐ எதிர்க்கும் போர்வையில் சில வருடங்களாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ISIS க்கு ஆயுத மற்றும் பண உதவிகள் செய்து அதனை வளர்ப்பதை இதுவரை அவதானித்த சீஆக்களும் ரஷ்யாவும், நிலைமை இப்படிப் போனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவும் வஹாபிகளும் மேலோங்கி விடுவர் என்பதை உணர்ந்து, இப்போது ஸிரியாவில் சீஆ சார்பு அரசாங்கத்துக்கு உதவியாக ரஷ்யா நேரடியாக யுத்தத்தில் இறங்கியுள்ளது.
இத்தனை வருடங்களாக அமெரிக்கா ISIS ஐ தாக்குவதாக பாசாங்கு பண்ணி, அதற்கு விமான மூலம் ஏராளமான ஆயுத உதவிகள் வழங்கி அது வளர்ந்தது. ஆனால் ISIS மற்றும் வஹாபி பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக ரஷ்யா ஸிரியாவில் யுத்தத்தில் இறங்கி ஒரு மாதத்துகுள்ளேயே ஸிரியாவில் பல மாநிலங்களிலிருந்து வஹாபி பயங்கரவாதிகளை அது விரட்டியுள்ளது. எனவே மற்ற அரபு நாடுகளும் வஹாபி தீவிரவாதத்திலிருந்து தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ரஷ்யாவையே நம்ப முன்வந்துள்ளன. எகிப்து ஏற்கனவே ரஷ்யா சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்தியுள்ளன. ஸவூதி அதிகாரிகளும் ரஷ்யாவுக்கு சென்று வந்தனர். இவ்வார அளவில் குவைத் மன்னரும் ரஷ்யா செல்லவிருப்பதாக செய்தி.
இப்போது சீஆ ஆதிக்கத்தில் உள்ள இராக்கும் ரஷ்யா தனது நாட்டில் நேரடியாகத் தலையிட்டு, வஹ்ஹாபி மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்கும்படி கோரியுள்ளது.
இவற்றிலிருந்து விளங்குவது என்ன? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த இராக் தங்கமலை யுத்தம் நெருங்கிக் கொண்டு வருகின்றது. வஹாபிகளும் சீஆக்களும் தான் அமெரிக்க ரஷ்ய உதவியுடன் யுத்தத்தில் மோதப் போகின்றன والله أعلم
ஸஹாபாக்களை இழிவு பண்ணும் சீஆக்களும் , அல்லாஹ்வுக்கு உருவ வழிபாடு செய்து, ரஸூலுல்லாஹ்வையும் அவ்லியாக்களையும் (அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது. அவர்கள் வெறும் மையித்து தான், பார்க்க, பேச, கேட்க முடியாதவர்கள் தான் என்று) அவர்களை இழிவு பண்ணும் வஹ்ஹாபிகளும் துன்யாவுக்காக யுத்தம் செய்ய தயாராகிறார்கள். ஆங்காங்கே அவர்களுக்கிடையில் யுத்தம் சிறிது சிறிதாக ஆரம்பித்தும் விட்டது.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெரியளவிலான யுத்தம் ஏற்படும் சாத்தியங்கள் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டாலும்கூட, இஸ்லாமிய உலகில் மிகப் பெரிய அளவில் இரண்டு துருவங்களாக நீறு பூத்த நெருப்பாக வெடிக்க காத்திருக்கும் எரிமலைகளாக சீஆக்களும் வஹாபிகளும் இருந்து வருகின்றனர். எனவே என்றோ ஒரு நாள் முஸ்லிம்களில் இரண்டு பெரிய சக்திகள் மாபெரும் யுத்தமொன்றில் ஈடுபடுவதென்றால் அது சீஆக்களும் வஹாபிகளும் தான் என்பதை சமகால முறுகல் நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆயின் "நீங்கள் அந்த யுத்தத்தில் பங்கு பற்ற வேண்டாம்" என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்புக்கட்டளையிட்ட கூட்டம் , ரஸூலுல்லாஹ்வின் உண்மையான இஸ்லாத்தை பின்பற்றும் அந்த நேர்வழி பெற்ற கூட்டம், ரஸூலுல்லாஹ் அவர்கள் விரும்பும் மூன்றவது ஒரு கூட்டம் இருக்க வேண்டமல்லவா? அவர்கள் யார்?
ஆம், சீஆக்களையும் வஹாபி இயக்கங்களையும் விட்டால் உலகில் எஞ்சி நிற்கும் ஒரே இஸ்லாமிய கூட்டம் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கூட்டம் மட்டுமே என்பதில் எமக்கோ அந்த இரண்டு கூட்டத்தார்களுக்கோ மத்தியில் எந்தக் கருத்து வேறு பாடும் இல்லை.
ஆம், அவர்கள் தான் தரீக்கா, மத்ஹபுகளைப் பின்பற்றி, 1400 வருடங்களாக தொடராக ஒரே இஸ்லாத்தில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து கூட்டம். அதனால் தான் இன்றைய மத்திய கிழக்கு யுத்ததில் வஹாபி பக்கமும் சேராமல் , சீஆப் பக்கமும் சேராமல் தன் பாட்டுக்கு இஸ்லாத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாடு பிடிக்கும் ஆசை , தங்கமலை ஆசை இல்லாமல் இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அப்படியான தரீக்கா மாத்ஹபு தூய இஸ்லாத்தில் எம்மை பாதுகாத்த ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அல்ஹம்துலில்லாஹ்.