Sunday, January 31, 2016

சதி+வஹாபி பத்திரிகை=ஸிஸி இருட்டடிப்பு

கண்களை மூடிக்கொண்டு "சூரியன் இல்லை" என்பவனின் பரிதாப நிலை தான் இலங்கை ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் எகிப்து ஜனாதிபதி ஸிஸிக்கு எதிராகக் கதைப்பது . இந்த பரிதாப நிலைமைக்கு முக்கிய காரணம், கஹடோவிட புகாரித் தக்கியா பதவியாசை பிடித்த சதிகாரர்கள் அகில இலங்கை ரீதியில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து பத்திரிகை நடாத்தும் தகுதியுள்ளவர்களை ஓரம் கட்டியதால், வஹாபி சார்பு பத்திரிகைகளையே படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் தள்ளப்பட்டது தான்.
     இதன் காரணமாக முஸ்லிம்களின் செய்திகளையும், மத்திய கிழக்கு விவகாரங்களையும் அறிய முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே வழி வஹாபி சார்பு பத்திரிகைகளை நாடுவது மட்டுமே. எனவே அப்பத்திரிகைகளே தஞ்சம் எனக்கொண்ட முஸ்லிம்களில் தலைகளில் வஹாபித் தலைவர்களை புகழ்ந்தும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து தலைவர்களை மோசமானவர்களாக சித்தரித்தும் செய்திகளை நிரப்பினார்கள் வஹாபி பத்திரிகையாளர்கள். இலங்கை முஸ்லிம்களை உலக விவகாரத்தில் வஹாபிகளாக மாற்றிய இந்த அநியாயத்துக்கு முழுப் பொறுப்புதாரிகள் கஹடோவிட புகாரித் தக்கியா நிர்வாகிகளே. இதனை எப்போதும் பகிரங்கமாக நிரூபிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
இலங்கையில் ( பெரும்பாலும்) எந்த முஸ்லிமுடன் கதைத்தாலும் ஸிஸியையும், அல் அஸ்ஹர் சர்வகலாசாலை உலமாக்களையும் எதிர்த்தும், முர்ஸியையும், கர்ழாவியையும், கட்டாரையும், துருக்கியையும் ஆதரித்தும் கதைப்பதைப் பாரக்கலாம். இலங்கை முஸ்லிம்களுக்கு உண்மையான மத்திய கிழக்கு நிலைமைகளைக் காட்டுவதற்கு கஹடோவிட புகாரித் தக்கியா நிர்வாகம் மாபெரும் தடையாக இருக்கும் இந்நிலையில் எம்மால் செய்ய முடிந்தது எமது நெட் மூலம் மிகச் சிறிய அளவான ஒரு சேவை மட்டும் தான்.
முஸ்லிம் சிறார்களுக்கு அல் குர்ஆனையும், அடிப்படை மார்க்க சட்டங்களையும் போதிக்க "வக்பு" செய்து , எமது தகப்பனாருக்கு எமது உறவினர்கள் சிலர் அக்காலத்தில் தந்த காணியையும், தகப்பனார் வீடவீடாகப் போய் பணம் சேர்த்து கட்டிய பள்ளிக்கூட கட்டடத்தையும் (பின்னர் மஸ்ஊத் ஹாஜியார் அவர்கள் தனது சொந்தச் செலவில் அதனைப்ணர் நிர்மானம் செய்து தந்தார்) கஹடோவிட புகாரித் தக்கியா சதிகார நிர்வாகம் கடந்த எட்டு வருடங்களாக மார்க்க சட்டத்துக்கு முரணாக ஹராமான முறையில் எம்மிடமிருந்து அபகரித்தனர். மத்ரஸாவை மூடி முஸ்லிம் சிறார்கள் குர்ஆனை ஓத முடியாமல் தடை செய்தனர். குர்ஆன் ஓதிக்கொடுக்க தடை போடும் அநியாயம் இலங்கையில் வேறெந்த ஊரிலும் நடந்திருக்காது. எந்த வஹாபியும் எந்த சீஆவும் இவ்விதமாக குர்ஆனுக்கு செய்யாத அநியாயத்தை சதிகாரர்கள் செய்தனர்.
இதனால் நாம் எமது சொந்தக் காணியில் ஹக்காளர்களான எமது ஆதரவாளர்களின் உதவியால் மத்ரஸா கட்டி குர்ஆன் மத்ரஸா நடாத்துகிறோம்.
அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு ஞாயிறு இரவும்  விசேசமான மார்க்க ஆதாரங்கள் இங்கு கலந்துரையாடப்படுகின்றன.
1-தொழுகை முதலான பிக்ஹு சம்பந்தப்பட்ட விளக்கங்கள்,
2-வஹாபிகள் கவாரிஜ்களே என்பதற்கான உறுதியான ஆதாரங்கள்,
3-மத்திய கிழக்கில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை இலங்கையின் சகல பத்தரிகைகளிலும் இருட்டடிப்புச் செய்யப்படும் உண்மைகள்,
4- தக்கியாவில் எமது மூன்று வருட நிர்வாக காலத்தில்­ (1996, 97, 98) குறிப்பாக கஹடோவிடாவிலும் பொதுவாக இலங்கையிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து மேலோங்கி, வஹாபி தலைவர்களின் வாயடைக்கப்பட்டு, அவர்கள் விவாதத்துக்கு பயந்து ஓடி யொழித்து, ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலமாகவும் ( auspicious ), சதிகாரரால் எமது பதவி பறிக்கப்பட்டு, இந்த பதினாறு (16) வருடங்களாக நாடு பூராக பல நூறு மௌலவிமார்கள் பயான் பண்ணியும்கூட, வஹாபியத்து மிக வேகமாக வளர்வதேன்? முன்பு கொழும்பிலும் தெற்கிலும் இல்லாத அத்வைத குப்ரியத்து இப்போது பரவுவதேன்? முன்பு அறவேயில்லாத சீஆ வழிகேடு இப்போது தீவிரமாகப் பரவுவதேன்? என்று பலரும் கேட்கும் அதி முக்கிய கேள்விகளுக்கும் இங்கு தெளிவுகள் கொடுக்கப்படுகின்றன.
இன்னும் பலவிதமான அறிவுகள் இந்த தஃலீம் மஜ்லிஸ் மூலம் வழங்கி வருகின்றோம்.
சரி, விடயத்துக்கு வருவோம். வஹாபி பத்திரிகைகளினால் Brain wash செய்யப்பட்டதன் விளைவாக ஜனாதிபதி ஸிஸிக்கு எதிராக அதிகமான இலங்கை முஸ்லிம்கள் பேசுவதால் அவரைப்பற்றி சில உண்மைத் தகவல்களை அவ்வப்போது அரபியில் மட்டுமாவது தருவதற்கு நினைத்துள்ளோம்.
உலமாக்கள் மூலம் அவற்றை விளங்கியறிந்து இருட்டான வஹாபி உலகை விட்டு வெளியேறி வெளிச்சத்துக்கு வாருங்கள். வஹாபித் தலைவர்களை நல்லவர்கள் என்று நம்பி படிப்படியாக வஹாபியாகும் ஆபத்தை தவிர்ந்து கொள்ளுங்கள்.
கஹடோவிட புகாரித் தக்கியா சதிகாரர்கள் எமக்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் காரணமாக அவற்றை மொழி பெயர்த்து தருவதற்கு எமக்கு வசதிகளோ அவகாசமோ  இல்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்க்க கொள்கையில் உறுதியான அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்கள் ஏராளம் பேர் , இலங்கை வஹாபி பத்தரிகை செய்திகளை மட்டுமே நம்பியிருப்பதால், மத்திய கிழக்கு அரசியலில் அவர்கள் "வஹாபிகளாக" இருக்கிறார்கள்.
நான் ஆசிரியராக இருந்து, வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருந்த, அகில இலங்கை ரீதியான ஒரே மாதாந்த சஞ்சிகையான, "வெற்றி" மாதாந்த சஞ்சிகையும் சதிகாரர்கள் எம்மை ஓரங்கட்டியதன் மூலம் அழித்து மூடி விட்டார்கள்.
எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் ஸிஸி பற்றி சில வரிகள் :-
1- அமெரிக்க சார்பு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியை வெறுத்த எகிப்து மக்கள் செய்த புரட்சியை தந்திரமாக தமக்கு சாதகமாக பயன் படுத்தி தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தார் வஹாபி முர்ஸி. ஒரு வருட ஆட்சியிலேயே நாட்டில் குழப்பங்களும், வறுமையும், அல் அஸ்ஹரை வஹாபியாக்க முனைதலும், தீவிர அமெரிக்க சார்பையும் கண்ட எகிப்து மக்கள் மூன்று கோடிக்கும் அதிகமானோர் ( ஹுஸ்னி முபாரக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த தொகையினரை விட மிகப் பெரிய தொகையினர்) வீதிகளில் இறங்கி பல நாட்களாக முர்ஸிக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடாத்தும் போது, மக்கள் பக்கம் ராணுவம் நின்று, ராணுவத்தலைவர் அப்துல் பத்தாஹ் ஸிஸி நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, வஹாபி முர்ஸியை கைது செய்து, நாட்டில் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
2- அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவருடன் பேச அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முனைந்த போது, துணிவுடன் டெலிபோன் அழைப்பைத் துண்டித்த ஒரே வீரத் தலைவர் இந்த ஸிஸி. இதனால் வெகுவாக சீற்றமடைந்த ஒபாமா உடனடியாக எகிப்துக்கான இராணுவ ஆயுத விநியோகத்தை தடை செய்தார். ஸிஸி அமெரிக்க ஆள் அல்ல என்பதற்கும், முர்ஸி அமெரிக்கா விரும்பும் ஆள் என்பதற்கும் இது ஒன்றே போதாதா?
3- சீக்கிரமாக சுதந்திரமான ஒரு தேர்தலை நடாத்தி, முன்பு முர்ஸி பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் பெற்று எகிப்து மக்கள் தன்னையே விரும்புகிறார்கள் என்பதை ஜனநாயக வழியில் ஸிஸி நிரூபித்து, ஜனாதிபதியானார். ( ஸிஸியின் அப்போதைய எதிரியான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட) உலகின் சகல கண்காணிப்பு நாடுகளின் கண்காணிப்பாளர்களையும் அழைத்து , தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் எல்லோரும் கூட்டாக விடுத்த அறிக்கை என்ன தெரியுமா? "மத்திய கிழக்கு நாடுகளில் இது வரையில்லாத ஜனநாயக முறையில் சுதந்திரமாக தேர்தல்கள் நடைபெற்றன" என்று அனைவரும் பாராட்டினர்.
நாட்டை ஒரு வருடத்திலேயே குட்டிச் சுவராக்கிய முர்ஸியின் இக்வானுல் முஸ்லிமீன் வஹாபி சார்பு கட்சிக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று தடை விதிக்கப்பட்டதை எவரும் ஒரு குறையாக கூற முடியாது. காரணம், முர்ஸி ஆதரவு இக்வானுல் முஸ்லிமீன் வஹாபிகள் மிகச் சுதந்திரமாக வாக்களித்தனர். அவர்கள் ஸிஸிக்கு எதிராகவே வாக்களித்தனர். முர்ஸி ஆதரவாளர்கள்தான் அதிகமானவர்கள் என்றால் அவர்கள் ஸிஸியை தோற்கடித்திருக்க முடியும் அல்லவா? இதிலிருந்து, சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்குக்கு எதிரான ஸுன்னி முஸ்லிம்களின் வாக்குப் பலத்தாலேயே முர்ஸி முதலில் தெரிவானார் என்பதும், இப்போது முர்ஸியின் அநியாயங்களைக் கண்ட மக்கள் ஸுன்னி தலைவரான ஸிஸியை விரும்பினர் என்பதையே இது காட்டுன்றது.
4- மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பாதுகாவலனான அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்க ரஷ்யாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒபாமா, இப்போது ஸிஸிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருகிறார். ஸிஸிக்கு உதவ முன்வருகிறார். ஆனால் அமெரிக்காவுடன் எச்சரிக்கையாகவே இருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போது காலைவாரமரிடலாம் என்பது ஸிஸிக்கு தெரியும்.
5- ஹஸனுல் பன்னா, செய்யித் குதுப் காலம் முதல் சுமார் 80 வருடங்களாக வஹாபி இக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சகல உதவிகளும் செய்து, பயங்கரவாதம் மூலம் இஸ்லாத்தை அழிப்பதற்காக அதனை வளர்த்த நாடு தான் பிரிட்டன். இஸ்லாம் என்ற பெயரில் உலகில் நடக்கும் பயங்கரவாதங்களின் மூல வேர் இக்வானுல் முஸ்லிமீன் கட்சியே என்பதை ஸிஸி நிர்வாகம் கடந்த பல வருடங்களாக உலக வல்லரசு நாடுகளுக்கு எடுத்து விளக்கி வந்தது. ஆனால் பிரிட்டன் தொடந்தும் இக்வானுல் முஸ்லிமீன் தலைவர்கள் பிரிட்டினில் பணம் திரட்ட உதவி வந்தது. கடந்த மாதம் பிரான்ஸில் தாஇஷ் IS வஹாபிகள் தாக்குதல் நடாத்திய பின்னர் தான் ஸிஸி சொன்னதன் உண்மை பிரிட்டனுக்கு விளங்கியது. பயங்கரவாதத்துக்கு அடிப்படையாக இருப்பது இக்வானுல் முஸ்லிமீன் வஹாபி இயக்கமே என்ற ஸிஸியின் கூற்றை இப்போது உலக நாட்டுத் தலைவர்கள் சகலரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
6- மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட இப்போது ரஷ்யாவும், சீனாவும் ஸிஸிக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. ஸுன்னி நாடுகளில் தனது ஆதரவு குறைவதைக் கண்டு சினங்கொண்ட அமெரிக்கா, இப்போது சீஆ ஈரானோடு சல்லாபம் செய்கிறது. ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்கியது. ஈரான் அணு ஆயுத உற்பத்திக்கு மறைமுக ஊக்கம் கொடுக்கிறது. அரபு நாடுகளை ஈரான் சீஆ மயமாக்க மறைமுக ஆதரவு கொடுக்கிறது.
7- வஹாபியத்தை ஒரு நூற்றாண்டாக வளர்த்த அரபு நாடுகள், அதிலிருந்தே உற்பத்தியான தாஇஷ் ( ISIS) வஹாபிகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றன. தம்மை காப்பாற்றும் என்று நம்பியிருந்த அமெரிக்கா இஸ்ரேலை வளர்ப்பதையும், தாஇஷை வளர்த்து தமது பதவிகளுக்கே ஆபத்தாக அமைவதையும் அரபு தலைவர்கள் கண்கூடாக காண்கின்றனர். எனவே இப்போதாவது, நெடுங்காலத்துக்குப் பிறகு அரபு நாடுகளுக்கு கிடைத்துள்ள அஹ்லுஸ்ஸுன்னா வீரத் தலைவரான ஸிஸியின் கரத்தை அரபு நாடுகள் பலப்படுத்தினால், வஹாபி தாஇஷ், அடிமெரிக்க ஏகாதிபத்தியம், சீஆ தலையீடுகளை விட்டும் அரபு நாடுகளைப் பாதுகாக்க முடியும் இன்ஷா அல்லாஹ். لا حول ولا قوة إلا بالله
OK

Friday, January 29, 2016

தஜ்ஜால் போகும் விமானம்?

தஜ்ஜால் 40 நாட்களுக்குள் உலகின் சகல நாடுகளுக்கும் போதவதாக பல ஹதீஸுகள் வந்துள்ளன. அந்த 40 நாட்களின் அளவு பற்றியும் பல அறிவிப்புக்கள் வந்துள்ளன. அது பற்றிய சிலரின் ஆய்வுகள் அடங்கிய ஒரு அரபி Link கீழே தரப்பட்டுள்ளது. (குறிப்பு :- இது போன்றவற்றை மொழி பெயர்த்து தருவதற்கு எமக்கு இருந்த அவசாகங்களும் வசதிகளும் மடமை விரும்பும் சதிகாரரால் 16 வருடங்களாக பறிக்கப்பட்டுள்ளன).
சரி எப்படியோ இன்றைய விமான சேவையுடன் ஒப்பிட்டால் தஜ்ஜால் 40 (சாதாரண) நாட்களில் உலகின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியுமா என்று சிலர் கேட்கலாம்.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் வேகத்தைப் பார்த்தால் இக்கேள்விக்கான விடை இலகுவாக இருக்கும்.
லண்டனிலிருந்து நிவ்யோர்க் செல்ல இந்த விமானத்துக்கு எடுக்கும் நேரம் வெறும் பதினொரு (11) நிமிடங்கள் தானாம். 10 பேரை ஏற்றிக்கொண்டு 20,000 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணித்தியாலத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்குமாம்.

28.1.2016

Tuesday, January 19, 2016

குத்பு நாயகம் என்றால் ......

இது குத்பு நாயகம் அவர்களுடைய மாதம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து மக்கள் அதிலும் குறிப்பாக காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மனாகிபுகளில் வாசித்து அவர்கள் பால் மஹப்பத்தை அதிகரித்துக்கொள்ளும் மாதம்.

قطب الاقطاب غوث الأعظم محيي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز رضي الله عنه
"குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் - ரழியல்லாஹு அன்ஹு"

இது எல்லா உலமாக்களும் குத்பு நாயகத்தைப் பற்றிய பயான்களில் அடிக்கடி உபயோகிக்கக் கூடிய ஒரு சொற்றொடர். சரி இதன் பொருள் என்ன என்று சிந்தித்தீர்களா?

புவியியல் பாடத்தில் நீள் கோடுகள் என்று இருக்கின்றன அல்லவா? அக்கோடுகள் எல்லாம் வட – தென் துருவங்களில் ஒரே இடத்தில் ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும் இடத்துக்கு வட துருவம், தென் துருவம் என்று பெயர். அரபியில் குத்பு ( قطب ) என்று சொல்லப்படும்.

அதே மாதிரி உலகில் உள்ள எல்லா அவ்லியாக்களும் ஒரு வலியுல்லாஹ்வின் ஆத்மீக ஆட்சியின் கீழ் ஒன்று சேர்வார்கள். அவர் அந்த எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பார். எனவே அவருக்கு ஆத்மீக பரிபாசையில் "குத்பு" என்று பெயர்.

அப்படியாக எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பவருக்கு "குத்பு" என்றும், அந்த "குத்புமார்கள்" அனைவருக்கும் தலைவராக இருப்பவருக்கே  "குத்புல் அக்தாப்" (قطب الاقطاب) என்றும் பெயர்.

"கௌதுல் அஃழம்" (غوث الأعظم) என்றால் பொருள் என்ன ?
"கௌது"  (غوث) என்றால் "இரட்சிப்பவர்" என்பது பொருள். அதாவது : "பாதுகாப்பவர்" என்று தற்கால இலகு நடையில் கூறலாம். பிள்ளைகளை பெற்றோர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதில்லையா? மாணவர்களை ஆசிரியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து ஜனாதிபதி "பாதுகாக்கிறார்" என்றும், நோயாளிகளை நோயிலிருந்து வைத்தியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், கூறுவது எல்லோரும் அறிந்த மொழி வழக்கு அல்லவா?
நபிமார்களும் அவ்லியாக்களும் குப்ரு, சிர்க்கு, பாவங்களில் நின்றும் மனித இனத்தை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதும் சர்வ சாதாரணமாக அனைவரும் அறிந்த விடயம்.

எனவே அவ்லியாக்களின் தலைவரான குத்பு நாயகம் அவர்களும் மனிதர்களை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவது மிகவும் தெளிவான மொழி நடை அல்லவா? இதனை அரபு மொழியில்  ( غوث ) என்கிறோம். ஏற்கனவே கூறிய விதம் அவர்கள் எல்லா குத்புமார்களுக்கும் தலைவராக இருப்பதால்  (غوث الأعظم) என்று கூறுகிறோம். (الأعظم) என்றால், வலுப்பமான, மகத்துவமான, பெரிய, மேலான எனப் பொருள்படும். எனவே "பாதுகாப்பவர்களில் மிகவும் மேலானவர்கள்" என்பது இதன் பொருள். மொழி ரீதியாக சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.

"முஹ்யித்தீன்" (محيي الدين) என்றால், அவர்கள் தீனுல் இஸ்லாத்தை ஹயாத்தாக்கியவர்கள் என்று பொருள். மார்க்கத்தை ஹயாத்தாக்கிய நான்கு கலீபாக்கள், ஹனபி, மாலிக்கி, சாபிஈ, ஹன்பலி, புகாரி, முஸ்லிம், அபூ தாவுத், மாதுரீதி, அஷ்அரி இன்னும் உள்ள ஏராளமான இமாம்களுக்கும் இச்சொல் பொருந்தும். எனினும், குத்பு நாயகம் அவர்களின் காலத்தில் ஆத்மீக துறையில் ஏராளமான தவறான கருத்துக்களும் வழிகேடுகளும்  நிறைந்திருந்து, அவற்றை அவர்கள் நீக்கி, எல்லா அவ்லியாக்களின் ஆத்மீக பாதைகளையும் ஒன்றிணைத்ததால் அவர்களுக்கு "முஹ்யித்தீன்" என்ற பெயர் நிலைத்து நின்றது. அல்லாஹு தஆலா அக்கால ஸாலிஹீன்களின் மனதில் அந்த உணர்வைப் போட்டதன் காரணமாக அவர்கள் குத்பு நாயகத்தை அவ்வாறு அழைக்கலானார்கள்.

அப்துல் காதிர் (عبد القادر) என்பது அவர்களின் இயற் பெயர். தத்துவம் (சக்தி) உள்ள அல்லாஹ்வின் அடியான் என்பது அதன் பொருள். இப்போதும் இப்பெயரைத் தாங்கிய ஏராளம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

"ஜீலானி" (الجيلاني) என்பது, அவர்கள் பாரசீக நாட்டில் "ஜீலான்" என்ற ஊரில் பிறந்ததால் இவ்விதம் அழைக்கப் படுகிறார்கள்.

"கத்தஸல்லாஹு" (قدس الله) என்றால், அல்லாஹ் அவர்களை கௌரவிப்பானாக, தூய்மைப் படுத்துவானாக, பரக்கத்து செய்வானாக என்பது பொருள். ரஸூலுல்லாஹ் மீது ஸலவாத்து சொல்வது போன்று, ஸஹாபாக்கள் மீது " ரழியல்லாஹு அன்ஹு" (அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று கூறுவது போன்று, குத்பு நாயகம் அவர்களுக்கும் ஏனைய அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆக் கேட்பது ஆன்மீக வழக்கு. "ஸிர்ரஹு"  (سره) என்றால் அவர்களின் ரகசியத்தை, யதார்த்தத்தை , அகமியத்தை என்பது பொருள். எனவே குத்பு நாயகம் அவர்களின் அகமியத்தை பரக்கத்தானதாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆக் கேட்பதே இது. " அல் அஸீஸ்"  (العزيز) என்றால், வலுப்பமான, மகத்துவமான என்பது பொருள். ஆக, "அவர்களுடைய மகத்துவமான அகமியத்தை பரக்கத்தானதாக ஆக்குவாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்கும் துஆ தான் இது. இதில் என்ன விளங்காத புதிர் இருக்கிறது ?

"ரழியல்லாஹு அன்ஹு" (رضي الله عنه) என்றால் அவர்களைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக  என்பது அர்த்தம். ஸஹாபாக்களுக்கும், பெரும் அவ்லியாக்களுக்கும் இப்படி துஆ கேட்பது இஸ்லாமிய உலக வழக்கு. அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்று முஸ்லிம் உம்மத்து யாரைப் பற்றி நம்புகிறார்களோ அவர்களுக்கு இவ்வாறு துஆ கேட்பது முஸ்லிம்களின் வழக்கம்.

எனவே நாமும்  குத்பு நாயகம் அவர்களை இவ்வாறு புகழ்ந்து, அல்லாஹ்விடம் துஆக் கேட்டு, அதன் பரக்கத்தையும் அவர்களின் நேசத்தையும் பெற்றுக் கொள்வோமாக.
19.1.2016


Sunday, January 10, 2016

பயங்கரவாதம் அழியுமா?


பயங்கரவாதம் அழியுமா ?
எவ்வளவு தான் வல்லரசுகளும் அரபு நாடுகளும் விமான தாக்குதல்கள், தரை தாக்குதல்கள் ஆகிய இராணுவ நடவடிக்கைகள் எடுத்தாலும் மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது :-
1-  பலஸ்தீன் சுதந்திர நாடாக உருவாகாதவரை மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது.
2- அரபு நாடுகளில் அந்நிய கலாச்சாரங்களுக்கு அரசாங்கம் உதவுவது நிற்காத வரையில் பயங்கரவாதம் அழியாது.
3- கவாரிஜ் வஹாபி  இயக்கங்களுக்கு எதிராக உள்ள ஏராளமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை பத்திரிகை, வானொலி, டி.வி, , இண்டர்நெட், மஸ்ஜிதுகள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகிய பிரதான செய்தி ஊடகங்கள் மூலமாக அரபு நாடுகளின் அரசாங்கங்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பாதவரை பயங்கரவாதம் அழியாது.
4- ஸுன்னி அரபு நாடுகளில் சீஆக் கொள்கையைப் பரப்ப ஈரான் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஈரான் நிறுத்திக் கொள்ளாதவரை மத்திய கிழக்கில் பயங்கரவாதம் அழியாது.
10.1.2016

Tuesday, January 5, 2016

மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்பு

மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்பு.
செய்திகளின் தலைப்புகள் மட்டும் :-
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் ஸவூதியில் உள்ள சீஆ ஆன்மீக தலைவரான நிமர் பாக்கர் நிமர் என்பவருக்கு ஸவூதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியது.
மரண தண்டனைக்குள்ளானவர் தனது தாயாருக்கு இறுதியாக பேசிய உரை :-
மரண தண்டனைக்கு பழி தீர்க்கும் வகையில் ஈரானில் உள்ள ஸவூதி தூதரகம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது :-
தூதரகம் எரிக்கப்பட்டவுடன் ஈரானுடனான ராஜதந்திர தொடர்புகளை ஸவூதி துண்டித்தது. இரான் தூதரலயத்தில் இருந்தவர்களையும் விரட்டியது. :-
ஸவூதியை பின்பற்றி சூடானும் ஈரான் ராஜதந்ரிகளை நாட்டை லிட்டு விரட்டியது :-
பஹ்ரைனும் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறித்து, ஈரான் தூதரகத்தை மூடிவிட்டது :-
ஐக்கிய அரபு இராச்சியமும் ஈரான் தூதரகத்தின் ஆட்களைக் குறைத்து தரத்தைக் குறைத்தது :-
ஸவூதி அரேபியாவுக்கு தனது பூரண ஆதரவு இருப்பதாக குவைத் அறிவித்தது :-
                யெமனிலும், ஸிரியாவிலும் நடந்துகொண்டிருக்கும் ஈரான் சார்பு, ஸவூதி சார்பு ( பயங்கரவாதத்துக்கு எதிரான) யுத்தங்களுடன் மேற்கூறிய சம்பவங்கள் தொடர்பு பட்டால் இந்த ராஜதந்திர உறவு முறிவுகள் நீண்ட தூரம் செல்ல வாய்ப்புண்டு. இன்றேல், சில நாடுகள் முன்வந்து ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஒரு சில வருடங்களுக்குள் மீண்டும் தொடர்புகள் ஏற்படலாம். இப்படியான உறவு முறிவுகளும் பின்னர் சேர்தலும் அரசியல் உலகில் சகஜம். 4.1.2016