இலங்கையை தாக்கிய கவாரிஜ் - வஹாபி பயங்கரவாதம்
கடந்த 21.4.2019 ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ கோயில்களையும் உல்லாச ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்ட (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பற்றி அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்கள் நாடாளுமன்றம் உட்பட எல்லா ஊடகத்துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் இந்நாட்டில் நடைபெறாமல் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.
இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட, இலங்கை முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு தம்மாலான பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையும் அடிக்கடி அறிவித்ததற் கிணங்க, இந்த விளக்கத்தை எழுத நினைக்கிறேன்.
உலகில் ஏராளமான நாடுகளில் இன்று நடைபெறும் இவ்வாறான (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாத படுகொலைகளை அதிகமான உலக நாடுகளின் அரசாங்கங்களும் உளவுத் துறைகளும் வெறும் “உலக நடைமுறை” கண்ணோட்டத்திலேயே ஆராய்கின்றன.
ஆனால் முஸ்லிம்களாகிய எமக்கு இந்த (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை அணுக வேண்டிய கோணத்தை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னரே பல குர்ஆன் வாசனங்கள் மூலமாகவும், நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் மூலமாகவும் தெளிவு படுத்தியுள்ளன.
ஆனால் உலகில் உள்ள அதிகமான முஸ்லிம் அரசியல் தலைவர்களோ, உலமாக்களோ இஸ்லாம் 1400 வருடங்கட்கு முன்னரே காட்டிய அந்தக் கோணங்களை அவதானிக்கத் தவறியதன் காரணமாகவும் (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை அடக்க இஸ்லாம் கூறிய வழியை பின்பற்றாததன் காரணமாகவுமே வஹாபி பயங்கரவாதம் இன்று உலகின் ஏராளமான நாடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாம் காட்டிய அந்த ஆதாரங்களை எல்லாம் இங்கு விபரிப்பது சாத்தியமில்லை. அவை புத்தக வடிவில் அல்லது பல பயான்களில் விபரிக்கப்பட வேண்டியவை. ஆனால், அவற்றின் பின்னணியில் சில தகவல்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தப் பயங்கரவாதிகள் “முஸ்லிம்கள் அல்லர்” என்ற தகவலை மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (23.4.2019) பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்த பயங்கரவாதிகள் “முஸ்லிம்கள் அல்லர்” என்பதனை ஏராளமான நபி மொழிகளின் வெளிப்படையான அர்த்தங்களும், பல இமாம்களின் தீர்ப்புகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 21ம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடந்து நூற்றுக் கணக்கான அப்பாவி மனித உயிர்களை பலியெடுத்த பின்னர் இப்போது பலரும், நேரடியாக தாக்குதலில் ஈடுபட்ட “தவ்ஹீத் ஜமாஅத்தை” மட்டும் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த ISIS பயங்கர வாதத்தின் பௌண்டேஷன் ஆன வஹாபிக் கொள்கைகள் எந்தெந்த இயகங்களில் உள்ளன என்ற தகவல்கள் வெளிவரவில்லை.
ஆனால் நாம் குவைத்தில் படிக்கும் போது அரபு நாடுகளில் வளர்ந்து வரும் (கவாரிஜ் – வஹாபி) இயக்கங்களின் கொள்கைகள், நோக்கங்களை மார்க்க ரீதியில் ஆராய்ந்து, இலங்கையைச் சேர்ந்த சக மாணவர்களிடமும், பல குவைத் மாணவர்களிடமும், அப்போதே 1984 முதல் பல தடவைகளில் கூறினேன், இந்த வஹாபி இயக்கங்கள் என்றோ ஒரு நாள் அரபு நாடுகளின் அரசாங்கங்களை பிடிப்பார்கள் என்பதை. அப்போது அரபு அரச தலைவர்கள் இப்படியொரு நாள் வரும் என்பதை கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள். இப்போது 2011 முதல் அரபு நாடுகளில் (கவாரிஜ் - வஹாபி) ISIS பயங்கரவாதத்தின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, 1996 முதல் கஹடோவிடாவில் நடந்த மாதாந்த பயான்களிலும், அடுளுகம, மள்வானை, பானதுரை, காலி, கொழும்பு போன்ற பல இடங்களில் நடந்த பயான்களிலும், இந்த (கவாரிஜ் – வஹாபி) இயக்கங்கள் முஸ்லிம்கள் அல்லர் என்றும், இவர்கள் மற்றவர்களை கொலை செய்வதே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதை நாம் ஏராளமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை காட்டி மிகத் தெளிவாக தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தோம்.
இது சம்பந்தமாக CD க்கள் மூலமாகவும், நாம் வெளியிட்ட “நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி”, “வஸீலா இல்லாமல் இஸ்லாம் இல்லை” என்ற இரண்டு புத்தகங்கள் மூலமாகவும் விரும்பியவர்கள் இந்த பயங்கரவாத இயக்கங்களின் வழிகேடுகள் பற்றிய மார்க்க ஆதாரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், “பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்த பின்னர் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறாமல், பயங்கரவாத செயலில் ஈடுபட முன்னரே அவர்கள் பயங்கரவாதிகள் தான் என்பதை இனம் கண்டாலேயே பயங்கரவாதத்தை அடக்க முடியும்” என்ற கருத்தை கடந்த புதன் கிழமை (24-4-2019) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் பொன்ஸேக்கா அவர்கள் வெளியிட்டார்.
அத்துடன், “பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயிற்றுவித்தவர்கள், அவர்களின் கொள்கை (ideology) களையும் அறிந்து அடியோடு அழித்தால் மட்டுமே இந்தப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கலாம்” என்ற கருத்தை ஏராளமான பாராளுமன்ற உறிப்பினர்களும், புத்தி ஜீவிகளும் ஊடகங்களில் குறிப்பிட்டார்கள்.
இந்த மூன்று கருத்துக்களையும் இலங்கை மட்டுமல்ல, உலகில் (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தால் அழிந்து கொண்டிருக்கும் சகல நாடுகளும் ஆராய முற்பட்டால், இந்த உலக (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை மடக்க இஸ்லாம் 1400 வருடங்கட்கு முன்னர் கூறிய தீர்வுகளை கண்டுபிடிக்க முடியும்.
இந்த (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதிகளின் பின்னணி என்ன? முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா? அல்லது ஒரு பிரிவினர் மட்டும் தான் பயங்கரவாதிகளா? அல்லது தீவிரவாத கொள்கையை தன்னகத்தே வைத்துக்கொண்டு வெளியில் நல்லவர்கள் போல் நடிக்கும் இன்னும் இயக்கங்களும் உண்டா? அப்படியாயின் அந்த பிரிவினர்கள் யார்? அவர்களின் அடிப்படை வாதங்கள் என்ன? என்ற கேள்விகள் முஸ்லிம் அல்லாதார் மத்தியில் எழுந்துள்ளன என்பதை கடந்த பல நாட்களாக டிவி யில் நடக்கும் வாதப்பிரதி வாதங்கள் காட்டுகின்றன.
ஒரு கேள்விக்கு விடை காண்பதன் மூலம், இந்தப் பல கேள்விகளின் மர்மத்தை துலக்க முடியும். அது தான் இந்தக் கேள்வி :
இவர்கள் எந்த பாசறையில் இவர்களின் “பிறரை வெறுக்கும் தீவிரவாத” கொள்கை பயிற்சி பெற்றார்கள்? இந்த பயங்கரவாதம் பிறப்பதற்கு காரணமாக அமைந்த மற்ற முஸ்லிம்களை விட்டும் இவர்களை வேறாக காட்டும் கொள்கை என்ன? சமாதானம் பேணும் இலங்கை முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் பின்பற்றி வரும் ஆன்மீக வழிகளான காதிரியா, சாதுலியா, ரிபாஇய்யா, நக்சபந்திய்யா முதலிய தரீக்காக்களைச் சேர்ந்தவர்களா இவர்கள்? இந்த தரீக்காக்களை ஆதரிக்கும் முஸ்லிம்களா? என்ற கேள்விகளை கேட்டால், நிச்சயமாக “இல்லை” என்பது தான் ஒரே விடை என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆயின் இவர்களின் ஆணி வேர் எங்கே? இவர்களை போசித்து வளர்த்தவர்கள் யார்? இவர்களும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து தான் என்று இவ்வளவு காலமும் இவர்களை தம்முடன் சேர்த்து இடுக்கி வளர்த்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தால் எதிர்காலத்தில் மீண்டும் இந்த (கவாரிஜ் -வஹாபி) பயங்கரவாதம் தலை தூக்காமல் தடுக்கலாம்.
ஒரு இயக்கத்தின் பெயரை மட்டும் கூறி, அதனை மட்டும் தடுத்து, ஆயுதத்துடன் கைதான சிலரை மட்டும் சிறையில் அடைத்தால் பயங்கரவாதம் அழியுமா? அந்த இயக்கத்தில் உள்ள பங்கரவாத சிந்தனை தலையில் நிறைந்த மற்றவர்களின் நிலை என்ன? அதே பயங்கரவாத சிந்தனை உள்ள மற்ற இயக்கங்களின் நிலை என்ன?
1400 வருடங்களாக உலகில் இருக்கும் மற்ற முஸ்லிம்களின் வஸீலா, மௌலிது முதலிய செயல்களை “சிர்க்கு” (இணை வைத்தல்) என்று கூறும் இயக்கங்களைச் சேர்ந்த சிலரே, படிப்படியாக வளர்ச்சியடைந்து, தீவிரவாதிகளாகி, இப்போது தற்கொலை குண்டுதாரிகளாக, ISIS ஆக மாறியிருக்கிறார்கள் என்பதை அல் அஸ்ஹர் முதலிய இஸ்லாமிய உலகின் அதியுயர் பல்கலைக் கலகங்களில் கேட்டால் அறிந்து கொள்ளலாம்.
இலங்கையில் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்து வந்த பௌத்தர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒரு சாரார் மற்ற சாராரை “வெறுப்புடன்” (சிங்களத்தில் “வைரய”) பார்க்க வில்லை. இஸ்லாம் மார்க்கத்துக்குள் இருக்கும் ஆன்மீக வழிகளான தரீக்காக்கள் என்ற உப பிரிவினர்களும் ஒரு சாரார் மற்ற சாராரை “வெறுக்க” வில்லை. ஒரு சாரார் இன்னொரு சாராரை “வெறுப்பதே” எந்தவொரு பயங்கரவாதத்தினதும் வித்து, ஆணி வேர் ஆகும்.
26.4.2019 இல் வெளியான பல தேசியப் பத்திரிகைகளின் முன்பக்க பிரதான செய்தியொன்றின் மூலம், முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரில் இருந்து இந்த (கவாரிஜ் – வஹாபி ) பயங்கரவாதிகள் உருவானார்கள் என்பதை சகல அரசியல், பாதுகாப்பு, சமூக தலைவர்களும் உணர்ந்து கொள்ள முடியும்.
முஸ்லிம்களின் “ஹுப்பு – அவ்லியா பள்ளிவாயில்களை” தாக்குவதாக பயங்கரவாதிகள் அறிவித்துள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன.
அதாவது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவ்லியாக்கள் மீதும் “ஹுப்பு” (நேசம்) வைத்து, மௌலிது ஓதும் பள்ளிவாசல்களையும், அவ்லியாக்களின் கப்ருகள் (ஸியாரங்கள்) உள்ள பள்ளி வாசல்கள், தர்காக்களையும் தாக்குவதாக (கவாரிஜ் – வஹாபி) பயங்கரவாதிகள் கூறுகிறார்கள்.
எனவே மௌலிது ஓதாத, அவ்லியாக்களின் ஸியாரங்கள் இல்லாத மற்ற முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்குவதில்லை என்ற செய்தியை பயங்கரவாதிகள் விடுத்துள்ளனர். எனவே “ஹுப்பு, அவ்லியாக்களுடன்” உள்ள முஸ்லிம்களை, (கவாரிஜ் – வஹாபி) பயங்கரவாதிகள், வெறுக்கிறார்கள் என்பதிலிருந்து, “ஹுப்பு, கந்தூரி, அவ்லியா ஸியாரம் இல்லாத (புதிதாக உருவான) முஸ்லிம் இயக்கங்களில் இருந்தே இந்த (கவாரிஜ் – வஹாபி) பயங்கரவாதிகள் உருவானார்கள் என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.
இலங்கையில் கடந்த சுமார் ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் காதிரிய்யா, சாதுலிய்யா, ரிபாஇய்யா, நக்சபந்திய்யா போன்ற ஆன்மீக தரீக்காக்களை பின்பற்றுகிறார்கள். அவர்களில் இருந்து எந்தப் பயங்கரவாதமும் வெளியாக வில்லை.
தரீக்காக்களை பின்பற்றும் நாடு பூராக இருந்த முஸ்லிம்கள், ஒரு தரீக்காவினர் மற்ற தரீக்காக்களின் மார்க்க வைபவங்களில் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்தனர்.
ஆனால் 1945 களுக்குப் பிறகு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, இஸ்லாம் என்ற பெயரில் உள்ள எந்த இயக்கவாதிகளும் மேற் கூறப்பட்ட, ஆதிகாலம் தொட்டு வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் மௌலித், திக்ரு மஜ்லிஸ்கள், அவ்லியா ஸியாரம் போன்றவற்றில் பங்கு பற்றுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. ஏன் அவர்கள் பங்கு பற்றுவதில்லை ?
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை “உண்மை முஸ்லிம்கள்” அல்லர் என்றும், “சிர்க்கு” வைத்து இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் கூறுவதை யாவரும் அறிவர். பரம்பரை முஸ்லிம்களை, புதிதாக இறக்குமதியான வஹாபி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் “வெறுப்புடன்” பார்த்தார்கள். அப்படி அவர்களிடம் பழைய முஸ்லிம்களைப் பற்றி “வெறுப்பு” இல்லை என்றால், பழைய முஸ்லிம்களின் மௌலித், திக்ரு மஜ்லிஸ்களில் பங்கு பற்றி அதை நிரூபிக்கட்டும் !
இவ்வாறு தான், இன்று நாட்டையே அதிர வைத்த (கவாரிஜ் - வஹாபி) “பயங்கரவாதத்தின் வித்து” இந்த நாட்டில் விதைக்கப்படுகிறது. முதற் கட்டமாக ஆரம்ப முஸ்லிம்களின் ஒற்றுமையான “ஸுன்னத்து வல்ஜமாஅத்தில்” இருந்து ஒரு சாரார் பிரித்து எடுக்கப் பட்டார்கள். இன்னொரு இயக்கம் வந்து, பிரிக்கப்பட்ட அந்த இயக்கத்தில் உள்ளவர்களை (குறிப்பாக இளைஞர்களை) இன்னொரு இயக்கமாக பிரித்து அவர்களுக்கு, “உலக இஸ்லாமிய ஆட்சி” போன்ற மாய ஆசையை ஊட்டி அவர்களை Brain wash செய்து, ஆரம்ப முஸ்லிம்களின் மீது இன்னும் “வெறுப்பை” அதிகரிக்கிறார்கள்.
இன்னொரு தீவிர இயக்கம், பழைய முஸ்லிம்கள் அனைவரும் “காபிர்கள்” என்றும், எனவே அவர்களையும் முஸ்லிம்கள் அல்லாத மற்றவர்களையும் கொன்று அழித்து “இஸ்லாமிய ஆட்சியை”(?) இந்நாட்டில் அமைக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர்களைப் பின்பற்றுவோரின் மூளைகளில் திணிக்கிறார்கள். இப்படியாக வஹாபியத்து என்ற மூல இயக்கத்தின் படிமுறையான பரிணாம வளர்ச்சியே இந்த ISIS என்ற பயங்கரவாத இயக்கமாகும்.
எனவே, “சிர்க்கு – பித்அத்து” என்ற விச வித்து தான், “சிர்க்கு வைப்போரை அழிக்க வேண்டும்” என்ற மரமாக வளர்ந்து, பயங்கரவாத கனியாக “குண்டுத் தாக்குதல்” நடாத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு பழைய முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொன்றொழிக்க வேண்டும் என்ற “இயக்க வெறி”, “மிருக வெறி” யாக மாற்றப்பட்ட பின்னர், வெளி நாடுகளில் உள்ள இவர்களின் வஹாபி பயங்கரவாத தலைவரின் கட்டளைப்படி, அந்தந்த நாடுகளில் “பயங்கரவாத தற்கொலை” குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் சில மேற்கு நாடுகள் இருப்பதாக ஸிரியா முதலிய நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.
பீல்ட் மார்சல் பொன்ஸெக்கா அவர்கள் குறிப்பிட்டது போன்று, குண்டு வெடிக்க வைத்து நூற்றுக் கணக்கானோர் பலியான பின்னர், குண்டு சமைத்தவர்களை பிடித்து கூட்டில் அடைப்பதால் மட்டும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. அவனை உருவாக்கிய கொள்கையை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும்.
ஒற்றுமையான சமூகத்தில் “வெறுப்பு” (வைரய) என்ற பயங்கர விசத்தை விதைத்த இயக்கங்களை கண்டுபிடிக்க வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சமூக ஒற்றுமை பேணிய “பழைய இஸ்லாத்தில்” அவர்கள் இணைய வேண்டும்.
ஒரு இடத்தில் காலை 10.00 மணிக்கு தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்தும்படி பிரபாகரன் கட்டளையிட்டு, ஒரு “புலி பயங்கரவாதியை” அனுப்பினால், அவன் அத்தாக்குதலை நடாத்த நான்கு மணித்தியாலங்களுக்கு முன், காலை 6.00 மணிக்கு அவன் பயங்கரவாதியா இல்லையா? வெளிப் பார்வைக்கு “சாதாரண” ஒரு ஆளாகத்தானே அவன் காட்சியளிப்பான். அதற்காக அவனை பயங்கரவாதியாகப் பார்க்காமல், சாதாரண ஆளாக நினைத்தால் அந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க முடியுமா? “தனி நாட்டு கோரிக்கை”, “மற்ற சமூகங்களை வெறுத்தல்” என்ற பயங்கரவாத கோட்பாடுகளை (ideology) விட்டுவிடத் தயாரில்லாத அனைவரையும் அரசாங்கம் அழித்தொழித்ததன் காரணமாகத் தானே புலிப் பயங்கரவாதத்தை இந்நாட்டிலிருந்து ஒழிக்க முடிந்தது?
எந்த ஒரு பயங்கரவாதத்தின் பின்னாலும் ஒரு “பயங்கரவாத கொள்கை” (ideology) இருக்கும். அந்தக் கொள்கை மக்கள் மத்தியில் பரவி, அது தீவிர வாதமாக மாறி, பயங்கரவாதமாக வெடிக்க முன்னரே ஆரம்பத்திலேயே தடுப்பது மூலம் மட்டுமே அக்கொள்கை சம்பந்தப்பட்ட பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
ஆயிரம் வருடமாக உள்ள மற்ற முஸ்லிம்களின் சில கொள்கைகளை “சிர்க்கு”, “பித்அத்து” என்று கூறும், அல்லது கருதும் சகல இயக்கங்களையும், அவர்களின் மத்ரஸாக்களையும், அவற்றின் பாட நூல்களையும், அவற்றின் பிரச்சாரங்களையும், அரசாங்கமும் முஸ்லிம் தலைவர்களும் கண்டுபிடித்து, அந்த “சிர்க்கு , பித்அத்து” என்ற வெறுப்பு வாதத்தை முற்றாக அழித்து, அவர்களை பழைய முஸ்லிம்களின் மார்க்க கிரியைகளில் பங்குபற்ற வைப்பதன் மூலம் மட்டுமே, இலங்கையில் எதிர்கால முஸ்லிம் இளம் சந்ததியினர் “நாட்டை அழிக்கும் பயங்கரவாதிகளாக” மாறுவதைத் தடுக்க முடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
ஒருசில இயக்கங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு, அவை தான் பயங்கரவாதத் தாக்குதலை இந்நாட்டில் மேற்கொண்டதாக வானொலி, டி.வி. முதலிய ஊடகங்களில் தினமும் பேசப் படுகின்றது. (கவாரிஜ்- வஹாபி) பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. வஹாபி பயங்கரவாதத்தின் உலகளாவிய பல விதமான பெயர்கள் பற்றி விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நான்கு திருடர்கள் திருட வந்து, தந்திர புத்தி போதாத காரணத்தால் ஒரு திருடன் மாட்டிக் கொண்ட போது, மற்றத் திருடர்கள் எல்லோரும், மாட்டிக்கொண்ட அந்த திருடனை காட்டிக் கொடுத்து, தாம் தப்பும் நிலை மூலம் திருட்டை “அடியோடு ஒழிக்க” முடியும் என்று யாராவது நினைத்தால் அது, மற்றத் திருடர்கள் வேறு உபாயம் மூலம் மீண்டும் திருட இடமளிப்பதாகும். சகல திருடர்களையும் இனம் காண வேண்டும். டெங்கு நோயாளர்கட்கு சிகிச்சையளிப்பதுடன் அரசாங்கம் நின்று விடுகிறதா? டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் சகல தலங்களையும் அழிக்க முயற்சிக்கின்றதல்லவா?
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களும் 1400 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பயங்கரவாதத்துக்கு வைத்த பெயர் “கவாரிஜ்கள்” என்பதாகும். அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கோரத் தாண்டவமாடிய இந்த “கவாரிஜ்” பயங்கரவாதத்தை எதிர்த்து அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடும் யுத்தம் நடாத்தினார்கள்.
பின்னர் காலத்துக்கு காலம் “கவாரிஜ்” பயங்கரவாதம் தலை தூக்க முற்பட்ட போது, இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அது மடக்கப்பட்டது. நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும் என்றும், அங்கிருந்தே குழப்பங்கள் வெளியாகும் என்றும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற் கிணங்க, ஹிஜ்ரி 1111 இல் நஜ்தில் பிறந்த முகம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் மீண்டும் இந்த “கவாரிஜ்” பயங்கரவாதம் வேகமாக அரபு நாடுகளில் பரப்பப்பட்டது. அவனை உலக ஸியோனிஸ இயக்கம் போசித்து வளர்த்து, ஆயுத, பண உதவிகள் கொடுத்து வளர்த்த வரலாற்றை ஆயிரக்கணக்கான நூல்கள் வாயிலாக அறியலாம். பல மொழிகளில் வெளி வந்துள்ள “உளவாளி ஹம்ப்ரி”யின் டயரி இதனை விளக்குகின்றது.
ஆரம்ப காலத்தில் மார்க்க ரீதியில் “கவாரிஜ்” என்ற பெயரில் அறியப்பட்ட இந்த பயங்கரவாத இயக்கம், ஹிஜ்ரி 1111 இன் பின்னர் நஜ்தில் மீண்டும் மறு பிறப்பு எடுத்த போது, அதன் தலைவனின் தந்தையின் பெயரில் “வஹாபிய்யத்து” என்ற பெயரில் உலகில் பிரபலமடைந்தது. அதற்கு இஸ்லாமிய உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒவ்வொரு நாட்டிலும் வேறு பல பெயர்களால் அந்தந்த நாட்டு கவாரிஜ் தலைவர்கள் அந்த இயக்கத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, அதன் அசல் பெயரான “கவாரிஜ்” என்ற பெயரை மூடி மறைத்து விட்டனர்.
எனவே இலங்கை அரசாங்கமோ உலகில் வேறெந்த நாடோ இந்த (கவாரிஜ் – வஹாபி) பயங்கரவாத இயக்கத்தை இப்போது ஊடகங்களில் கூறப்படும் “தவ்ஹீத் ஜமாஅத்” என்ற ஒரு பெயரை வைத்து மட்டும் அதனை தடை செய்ய முடியும் என்று நினைப்பது பெரும் தவறு. தடை செய்யப்பட்ட பெயர்களை விட்டுவிட்டு, அவர்கள் வேறு ஏராளம் பெயர்களில் தமது பயங்கரவாத கொள்கையை வளர்ப்பார்கள். இன்று இந்தியா, பாகிஸ்தான், அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் இவர்கள் ஏராளமான இயக்கப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த விடயம்.
இந்த “கவாரிஜ்” பயங்கரவாதிகள் திருந்தி உண்மையான இஸ்லாத்துக்கு வந்தார்களா, மற்ற முஸ்லிம்களுடனும் முஸ்லிம் அல்லாத சமூகங்களுடனும் (பேச்சால் மட்டுமன்றி) மனதாலும் “வெறுப்பு” இல்லாத ஒற்றுமை நிலைக்கு வந்தார்களா என்பதை முஸ்லிம்களும் உலக நாடுகளும் அறிய வேண்டுமா? அதற்கு இருக்கும் ஒரேயொரு அளவுகோள், அவர்கள் தொன்று தொட்டு இருக்கும் பழைய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் மார்க்க கிரியைகளில் பங்கு பற்றுகிறார்களா இல்லையா என்பது மட்டுமே!
அப்படி அவர்கள் பங்கு பற்றினால் மட்டுமே அவர்களின் மனதுகளில் பிறரைப் பற்றிய “வெறுப்புணர்வு” அகன்று விட்டது , மனதால் மற்ற சமூகங்களுடன் ஒற்றுமையாகி இருக்கிறார்கள் , அவர்களின் கொள்கையில் “தீவிரவாதம், பயங்கரவாதம்” இல்லை என்பதற்கான அடையாளமாகும். இந்த அளவு கோள் அன்றி வேறெந்த அளவு கோளை வைத்து இந்த இயக்கவாதிகளை “நல்லவர்கள்” என்று யார் கணித்தாலும், அது வேறு பெயர்களில், பசுத்தோல் போர்த்திய புலிகளாக அவர்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டு என்றோ ஒரு நாள் மீண்டும் தமது வெளிநாட்டு “பயங்கரவாத தலைவனின்” கட்டளையை இந்நாடுகளில் நிறைவேற்ற இடமளிப்பதாக அமையும்.
உலகின் செல்வம் கொலிக்கும் சிறந்த அரபு நாடாக இருந்த லிபியாவின் தலைவரை படுகொலை செய்யும்படி கர்ழாவி என்பவர் கட்டளையிட்டதையும், லிபியா மீது போர் தொடுத்து அதனை அழித்த வெளி நாடுகளை அவர் பாராட்டியதையும், ஸிரியாவிலும், எகிப்திலும் அரசாங்கத்துக்கு எதிராக பயங்கரவாதத்தை அவர் தூண்டி விட்டதையும் YOUTUBE இல் காணலாம். அரபு நாடுகளில் பயங்கரவாதத்தின் பிரதான ஒரு ஆணி வேரான கர்ழாவியையும் அவர் சார்ந்த இயக்கத்தையும், உலகின் சக்தி மிக்க முன்னணி இஸ்லாமிய நாடான எகிப்து “பயங்கரவாத” பட்டியலில் சேர்த்துள்ளது.
எனவே 21.4.2019 அன்று இலங்கையில் பல இடங்களில் இரத்த ஆறு ஓட வைத்த (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்க விரும்பும் அதிகாரிகளும் உலமாக்களும் (கவாரிஜ் – வஹாபி) பயங்கரவாதம் பற்றிய அனுபவமுள்ள அந்த நாடுகளின் உதவியைப் பெறுவது மூலம் இலங்கையிலும் அதனை இல்லாதொழிக்க இலகுவாயிருக்கும்.
2011 இலிருந்து பல வெளிநாடுகளின் உதவியுடன் ஸிரியாவில் நடந்த (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை, துணிவோடு எதிர்த்து மடக்கிய ஸிரிய ஜனாதிபதி அஸாதிடமும், எகிப்தில் (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை துணிவோடு மடக்கிக் கொண்டிருக்கும் உலகின் பலம் வாய்ந்த ஸுன்னத்து வல்ஜமாஅத்து அரசியல் தலைவர் ஜனாதிபதி ஸிஸியிடமும் சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனை பெற்றால், இன்சா அல்லாஹ் இலங்கையிலும் இந்த (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாதத்தை அடக்க இலகுவாக இருக்கும்.
A.H.Abdhul Bary (B.A. Kuwait)
27.4.2019