தற்போதைய மத்திய கிழக்கு அரசியலில் அமெரிக்காவின் இரட்டை வேடம் :-
1- சந்தர்ப்பம் வரும் போது, எந்த நேரமும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி ஆக்கிரமிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும்) இஸ்ரேலைத் தயார் படுத்திக்கொண்டு வருகின்றன.
"முத்ஆ அரசியல்"
முத்ஆ (متعة) என்றால், தனது தற்காலிக காம தேவைக்காக தற்காலிகமாக ஒரு பெண்ணை மணமுடிக்கும் சீஆக் கொள்கையில் உள்ள வழக்கம். தனது தேவை முடிந்ததும் அவளை விட்டுவிடுவது. இதே மாதிரி தான் அமெரிக்க அரசியலும்.
2- முஸ்லிம் நாடுகளைப் பிளவுபடுத்தி, உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தி , மத்தியகிழக்கை ஆக்கிரமிக்கும் நோக்கில், எந்த முஸ்லிம் சக்தியை எப்படி ஆதரிக்க வேண்டுமோ அப்படி ஆதரித்தும், எப்போது அந்த சக்தியைப் பயன்படுத்த முடியாமல் போகிறதோ அப்போது வேறொரு முஸ்லிம் சக்தியுடன் நட்பு கொண்டு, முஸ்லிம் நாடுகளை பிளவு படுத்துவது அமெரிக்கா முதலிய ஸியோனஸ சக்திகளுக்கு கைவந்த கலையாகும்.
3- எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கை கைப்பொம்மையாக அமெரிக்கா உபயோகித்து வந்தது. இக்வான்களின் புரட்சியை அடுத்து முபாரக் பதவியை இழக்கவே, அவரை விட்டுவிட்டு, முர்ஸி தலைமையிலான இக்வான்களுடன் அமெரிக்கா நட்பு கொண்டது. எகிப்து மக்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இராணுவத் தலைவர் ஸிஸியை எப்படியாவது வீழத்த வேண்டும் என்ற நோக்கில் அவரின் அரசாங்கத்துக்கு ஆயுதம் கொடுப்பதை ஒபாமா நிறுத்தினார். எல்லா மட்டத்திலும் ஸிஸியை எதிர்த்தது அமெரிக்கா. ஆனால் அவரை வீழ்த்த முடியவில்லை.
இப்போது எகிப்தையும் அரபு நாடுகளையும் பலவீனப்படுத்துவதற்கு ஈரானை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. 1980 களில் குமைனியின் இஸ்லாமியப் புரட்சியை முறியடிக்க ரேகன் அரசு பகீரதப் பிரயத்தனங்களை எடுத்தது. ஸதாமை ஏவிவிட்டு எட்டு வருடங்கள் ஈரானுடன் யுத்தம் செய்தது அமெரிக்கா. ஆனால் ஈரானை முறியடிக்க முடியவில்லை. ஈரான் பொருளாதாரம், இராஜதந்திரம், இராணுவத் துறைகளில் எல்லாம் அமெரிக்கா நினைக்காத அளவுக்கு முன்னேறியது.
இப்போது எகிப்தில் ஸிஸி ஆட்சி வந்ததாலும், ஸிஸியை மடக்க அமெரிக்காவால் முடியாததாலும், தாஇஷ் (ISIS) களால் தமது பதவிக்கு ஆபத்து வருமோ என்ப்பயந்த அரபு நாடுகள் (குறிப்பாக ஸவூதி அரேபியா) தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சக்திவாய்ந்த நாடான எகிப்துடன் (ஸிஸியுடன்) கூட்டுச் சேர்ந்துள்ளதாலும், அமெரிக்காவுக்கு மத்தியகிழக்கில் முஸ்லிம் நட்பு நாடுகள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.
உடனே அமெரிக்கா தனது நீண்டகால எதிரியான ஈரானுடன் நட்புக்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஸதாம் ஹுஸைனிடமிருந்து இராக்கை அமெரிக்கா விடுவித்த போது இராக்கின் சீஆ சக்தியைப் பயன்படுத்தி இராக்கை ஈரான் நட்பு நாடாக மாற்றிக்கொண்டது முதல், அமெரிக்கா தனது ஈரான் எதிர்ப்புக் கொள்கையில் தளர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஆனால், "பெரிய சைத்தான்" என்றெல்லாம் அமெரிக்காவை ஒரு காலத்தில் மிகக்கடுமையாக விமர்சித்த ஈரானால் இப்போது வெளிப்படையாக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர முடியவில்லை. ஈரானில் உள்ள சீஆ பொதுமக்களால் அப்படியான புதிய அமெரிக்க ஸியோனிஸ நட்பை சீரனிக்க முடியவில்லை.
எனவே ஊடகங்களிலும் குத்பாக்களிலும் சீஆ தலைவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் பேசும் அதே வேளை அமெரிக்கா சீஆக்களுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிப்பதை அண்மைக்கால நடப்புகள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. ஈரானின் அணுசக்தி உற்பத்தியை சகல அரபு நாடுகளும் கடுமையாக எதிர்த்தும்கூட, அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இது ஈரான் மீது அமெரிக்கா பாசம் கொண்டுள்ளது என்பதால் அல்ல. மாறாக ஸிஸி தலைமையில் பலமாகி வரும் அரபு சக்தியை தகர்க்க முடிந்த ஒரே எதிர்ப்பு சக்தி ஈரான் தான் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளமையால்தான்.
எனவே இப்போது அமெரிக்காவின் மத்தியகிழக்கு கொள்கை அப்பம் பங்கிட்ட குரங்கின் கதையாகவே இருக்கின்றது. ஒரு வீட்டில் அப்பம் திருடிய இரண்டு பூனைகள் அப்பத்துக்காக சண்டையிட்ட போது இரண்டு பூனைகளும் சமாதானமாக அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு குரங்கிடம் போனபோது குரங்கு அப்பத்தை தராசியில் நிறுத்து நிறுத்து பாரமாகவரும் துண்டை தான் சாப்பிட்டு இறுதியில் முழு அப்பத்தையும் குரங்கே சாப்பிட்டு பூனைகள் ஏமாற்றத்தில் திரும்பிய கதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதே போன்று வஹாபியத்து பரவிய பின்னர் அரபு நாடுகளும் ஈரானும் இப்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கின்றன. அமெரிக்காவோ மாறிமாறி இரண்டு தரப்பினருடனும் நட்பு போன்று காட்டிக்கொண்டு, இரண்டு தரப்பினரையும் ஏமாற்றி முழு மத்திய கிழக்கையும் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு.