ஊர் பாவணையும், உண்மைப் பாவனையும்
ஊர்களில் பொதுமக்கள் சிலரால் அந்தப் பழமொழிகளுக்கு கொடுக்கப்படும் அர்த்தங்களும் அவற்றின் சரியான அர்த்தங்களும்.
- (குத்தம் பார்க்கில் சுத்தம் இல்லை)
ஒவ்வொருவருடையவும் குற்றங்களை தேடிக்கொண்டு போனால், ஒருவருமே சுத்தவாளிகள் இல்லை. எல்லோருமே தவறு செய்யக் கூடியவர்கள் தான் என்பதைக் கூற இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைகுடும்பங்களில் உள்ள உறவினர்கள் தமக்கிடையில் ஒவ்வொருவருடையவும் சிறிய தவறுகளைத் துருவித் துருவி தேடக்கூடாது. பேசக் கூடாது. அப்படி மற்றவர்களால் நடக்கும் சிறு சிறு தவறுகளையெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் (சுற்றம் என்ற) குடும்ப உறவுகள் பாதிக்கப்படும். குடும்ப உறவை இழக்க நேரிடும். குடும்பத்தில் அமைதியின்மை குழப்பங்கள் ஏற்படும். எனவே முடிந்தளவு குடும்பத்தில் உள்ளவர்களின் சிறு சிறு தவறுகளை கண்டும் காணாதது போல் நடந்தால் தான் குடும்பம் ஒற்றுமையாக, பலமாக அமையும். - (மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல)
மண்ணால் செய்யப்பட்ட குதிரையை உண்மையான குதிரை என்று நம்பி, அதில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றால் தோழ்வி தான். சிலரை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் அவர்கள் ஏமாற்றி விடுவர், இறுதியில் தோழ்விதான் என்பதைக் கூற இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கியது போல
சில ஆறுகளில் ஓடும் நீரோட்டம், சில வேளைகளில் கனமில்லாத (உறுதியில்லாத) தற்காலிக மண் குவியல்களை ஏற்படுத்தும். பார்வைக்கு அது உறுதியான மணல் மேடு போன்று காட்சியளித்தாலும் அதில் யாராவது காலை வைத்தால் உள்ளே அமிழ்ந்து விடுவார். மண் குதிர் என்று அழைக்கப்படும் அந்த இழகிய மண் குவியல் போன்று, நேர்மையில்லாத, வாக்களித்தால் வாக்கை நிறைவேற்றாத சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சை நம்பி யாராவது ஒரு காரியத்தில் இறங்கினால் வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றி வீடுவர். பொது மக்கள் பயன்படுத்தும் அர்த்தமும் இதையே குறிக்கின்றது. (குதிரை என்பதற்குப் பதில் குதிர் என்று கூறினால் சரி) - (வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனது)
ஒரு இடத்தில் சிறிது தண்ணீர் இருந்தது. அவிடத்துக்கு வெள்ளம் வந்து, வற்றும் போது, ஏற்கனவே இருந்த நீரையும் அள்ளிக்கொண்டு போனது. ஒருவனுக்கு உதவி செய்யும் உருவத்தில் வந்த ஒருவனோ அல்லது ஒரு விடயமோ ஏற்கனவே இருந்த வசதியையும் இல்லாமலாக்கி விட்டது என்பதைக் குறிக்க இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.
வந்த வெள்ளம் இருந்த வள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனதுஎந்த இடத்திலும் தேங்கி இருக்கின்ற தண்ணீரை, அவிடத்துக்கு வரும் வெள்ள நீர் உடனடியாக அடித்துக்கொண்டு போவதில்லை. வெள்ளம் வற்றிய பின்னரும் ஏற்கனவே இருந்த நீர் அவிடத்தில் தங்கி இருக்கும். படிப்படியாகத்தான் வற்றும். எனவே பழமொழியில் வெள்ளம் என்று கூறுவதற்குப் பதிலாக 'வள்ளம்' என்பதே சரியானது. வள்ளம் என்றால் தோணி. ஆற்றில் போய் மீன் பிடிக்கவும், ஆற்றைக் கடந்து மறு கரைக்குப் போகவும், வெள்ளம் வந்தால் அதன் ஆபத்துகளை விட்டும் தப்பவுமே ஒருவன் தோணியைப் பயன்படுத்துகிறான். அப்படியாக தோணியால் ஒருவன் தனது வாழ்வாதாராத்தை நடாத்திக் கொண்டு போகும் போது, ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் வந்து, அவனது தோணியை அடித்துக்கொண்டு போகின்றது. இதனால் அவனின் பொருளாதாரம், பாதுகாப்பு என்பன பாதிக்கப்பட்டு அவன் துன்பத்துக்கு ஆளாகின்றான்.
யாராவது தீயவர்களோ அல்லது இயற்கை அனர்த்தங்களோ வந்து , தனக்கு உதவியாக இருந்த ஒரு ஆளையோ அல்லது பொருளையோ அல்லது ஒரு தொழிலையோ காவிச் செல்வதைக் குறிக்க இப்பழமொழி பயன் படுத்தப்படுகின்றது. இங்கும் வெள்ளம் என்பதற்குப் பதில் 'வள்ளம்' என்பது மட்டும் மாறினால் சரி. அர்த்தம் ஒன்று தான்.
No comments:
Post a Comment