தரீக்காக்களைப் பின்பற்றுவோரில் இருந்தோ அல்லது மத்ஹபுகளைப் பின்பற்றுவோரில் இருந்தோ மனித இனத்தைக் கொன்று குவிக்கும் ISIS என்ற கொலைகாரக் கும்பலான தாஇஷ் உருவாகவில்லை, மாறாக தவ்ஹீது ஜமாஅத்து, ஸலபி, டீஏ , ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களை உருவாக்கிய வஹாபியத்திலிருந்தே இந்த மனித இனப்படுகொலைக் காரர்களான ISIS உருவானது என்பதை ஒரு வருடத்துக்கு முன்பே நாம் இப்பகுதியில் குறிப்பிட்டோம்.
அந்த உண்மையை இன்று முழு உலக நாடுகளும் அறிந்துள்ளன. உலகின் மிகப்பழமை வாய்ந்த (சாபிஈ இமாம் காலத்தில் உருவாக்கப்பட்ட) எகிப்தில் உள்ள அல் அஸ்ஹரி சர்வகலாசாலையும் கூட இப்போது வஹாபியத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. (1984 இல் எகிப்தில் இருந்த வஹாபி தலைவர் அப்துல்லாஹ் என்பவர் எகிப்து அரசாங்கம் காபிர் என்று பத்வா வெளியிட்டு, அவரை எதிர்த்து அல் அஸ்ஹர் உலமாக்கள் சிலர் அவருடன் விவாதம் நடாத்தியதை நாம் குவைத்தில் வீடியோவில் பார்த்த போதே, இவ்வளவு தூரம் வஹாபியத்தை எகிப்து உலமாக்கள் வளரவிட்டதை எண்ணி கவலைப்பட்டோம். இப்போதே வஹாபியத்தை வேறுடன் களையாவிட்டால் என்றோ ஒரு நாள் எகிப்தில் வஹாபி ஆட்சி வரலாம் என்று அப்போது நான் நண்பர்களிடம் கூறியது அவர்களுக்கு நினைவிருக்கலாம்.
எனினும் எகிப்து உலமாக்கள் வஹாபியத்தை மடக்க உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. எகிப்து உலமாக்களில் ஒருவரான குவைத் மஃஹதுத்தீன் அதிபர் உஸ்தாது முகம்மது சம்சுத்தீன், அப்துல் அஸீஸ் ஹாசிம் போன்றோரும்கூட, எகிப்தில் அரசாங்கத்துடன் ஒட்டியிருந்த உலமாக்களின் கவனயீனத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டனர்.
இதன் காரணமாகத்தான் நாம் 1984 களிலேயே கூறிய விதம் எகிப்தில் வஹாபி இயக்கங்கள் தீவிரமாக வளர்ந்து, வஹாபி இயக்கமான இக்வானுல் முஸ்லிமீனைச் சேர்ந்த முர்ஸி எகிப்தில் ஆட்சியைக் கைப்பற்றி அல் அஸ்ஹரையும் வஹாபி ஸ்தாபனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் அதிபர் ஸிஸி ஆட்சிப்பொறுப்பை ஏற்று வஹாபி தலைவர்களை கைது செய்தார். ஆனால் ஸிஸிக்கு எதிராக வஹாபிகளின் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
எப்படியோ காலம் கடந்தாவது எகிப்து உலமாக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் இப்போது வஹாபி இயக்கங்களால் தான் தாஇஷ் உருவானது, என்பதை அறிந்து, இப்போது அதற்கெதிரான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் எகிப்தின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான இப்ராஹீம் ஈஸா என்பவர் கூறுகிறார், தாஇஷ் பிறந்தது வஹாபியத்தில் இருந்து தான் என்பதாக.
தாஇஷின் கொலை வெறி அரபு நாடுகட்கு மட்டும் மட்டுப்பட்டதல்ல, முழு உலகையும் தாக்கக் கூடியது என்பதை 13.11.2015 வெள்ளிக்கிழமை பிரான்ஸில் அது நடாத்திய படுகொலைகள் புலப்படுத்துகின்றன.
இலங்கையில் இருந்தும் சில வஹாபிகள் ஸிரியாவில் ISIS இயக்கத்தில் சேர்ந்திருந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம்.
இலங்கையில் உள்ள வஹாபிகளும் தலைவர் என்ன கூறுகிறாரோ அது தான் குர்ஆன் ஹதீஸ் என்று நம்புகிறார்கள். உண்மையான உலமாக்களிடம் போய்க்கேட்பதில்லை, உண்மையைத் தேடிப் பார்ப்பதில்லை. தலைவர் என்ன சொன்னாலும் கண்மூடிப் பின்பற்றுகிறார்கள் என்பதை இன்று நாம் கண்கூடாக காண்கின்றோம். எனவே என்றோ ஒரு நாள் இலங்கையில் IS அட்டூழியங்கள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment