Sunday, April 5, 2015

யெமன் யுத்த பின்னணிகள் - 01

யெமனில் அரபு நாடுகளின் புயல் அணி தாக்குதல் ( عاصفة الحزم )

இன்று 26.3.2015 வியாழன் அதிகாலை பத்து முஸ்லிம் நேச நாடுகளின் யுத்த விமானங்கள் யெமன் நாட்டில் பாரிய தாக்குதலில் ஈடுபட்டன. ஈரானின் ஆயுத மற்றும் சகலவிதமான உதவியுடன் யெமனில் உள்ள பயங்கரவாத ஹோஸி சீஆக்கள் அந்நாட்டை ஆக்கிரமித்து, ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டியடித்து, நாட்டில் ஈரான் சார்பு சீஆ அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சி செய்யும்போதே பத்து முஸ்லிம் நாடுகள் ஸவூதியின் தலைமையில் ஒன்று சேர்ந்து திடீரென்று சீஆ தளங்களைத் தாக்கின.

இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள பல சுவையான தகவல்களை சுருக்கமாகப் பார்ப்போம்

ஹிஜ்ரி 3 ஆம் நூற்றாண்டு முதல் யெமனில் சீஆக் கொள்கை பரவ ஆரம்பித்தது. ஸைதிய்யா சீஆப் பிரிவினரே இவ்வாறு வட யெமனில் அதிகமாகப் பரவி பல நூற்றாண்டுகளாக அப்பிரதேசத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டி வந்தனர். சீஆக்களில் மற்ற 12 வகுப்பாரை விட இந்த ஸைதியாக்கள் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கைக்கு மிக நெருக்கமானவர்கள். ஸைதியாக்கள் ஸஹாபாக்களை தூற்றமாட்டார்கள். எமது இமாம்களை தூற்ற மாட்டார்கள். சீஆ இமாம்களுக்கு மறைவான அறிவு எல்லாம் உண்டு என்று கூறமாட்டார்கள்.

ஆனால் ஸவூதியின் தெற்கே அமைந்துள்ள யெமனின் வட பகுதியான ஸஃதா மாகாணத்தில் அதிகமாக வாழும் இந்த ஸைதியாக்களில் அண்மையில் ஹோஸிகள் என்ற ஒரு தீவிரப் பிரிவு உண்டாயிற்று. இந்த ஹோஸிகள் ஸைதியாக்கள் போலன்றி மிகத்தீவிரமாக ஸஹாபாக்களை தூற்றுகின்றவர்கள். ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களின் பிரதான எதிரிகளாக செயற்பட்டனர்.

மத்திய கிழக்கு பிரதேசத்தில் அரபு ஆதிக்கத்தையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கையையும் அழித்து பாரசீக, சீஆ ஆதிக்கத்தை ஏற்படுத்தவதே ஈரானின் பிரதான குறிக்கோள். ஸுன்னி அரபு நாடுகளான லெபனானையும், இராக்கையும், ஸிரியாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஈரான் , எப்படியாவது 60% க்கும் மேல் சாபிஈ மத்ஹபை பின்பற்றும் யெமனையும் சீஆ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத்திட்டமிட்டது.

அதற்கு ஈரான் தெரிவு செய்த ஆயுதக்குழுவே ஹோஸிகள் என்று அழைக்கப்படும் வம்பர்களான பயங்கரவாதிகள். பத்ருத்தீன் ஹோஸி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த தீவிரவாத இயக்கத்தை அவரின் மகன் ஹுஸைன் பத்ருத்தீன் ஹோஸி என்பவர் விரிவு படுத்தினார். இவர் ஈரானில் படித்து ஈரானின் ஆயுத உதவியுடன் யெமனில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்தார். 2004 இல் யெமன் இராணுவத்தை எதிர்த்து ஹுஸைன் பத்ருத்தீன் அல் ஹோஸி முதலாவது புரட்சியை மேற்கொண்டார். அதில் அவர் கொல்லப்பட்டார். இப்போது அவரின் மகன் தலைமை தாங்குகிறார்.

ஹோஸிகளின் சீஆக் கொள்கைக்கு தாம் கடும் எதிர்ப்பு என்பதாக ஸைதிய்யா சீஆ உலமாக்களே பகிரங்கமாக தெரிவித்தனர்.

யெமனை ஆக்கிரமிக்க முயன்ற அல்காஇதா இயக்கத்தினரை இந்த ஹோஸிகள் ஈரானின் உதவியுடன் மடக்கினர். இவ்வாறு வெற்றிக் களிப்பில் திளைத்த ஹோஸிகள் முழு யெமனையும் கைப்பற்ற ஈரானின் உதவியுடன் கடந்த வருட இறுதிப்பகுதி முதல் பல கெரில்லாத் தாக்குதல்களை நடாத்தினர்.

அல்காஇதாவுடன் யுத்தம், இக்வானுல் முஸ்லிமீனுடன் யுத்தம், தாஇஷுடன் யுத்தம் இப்படி மூன்று பக்கத்தாலும் யுத்தத்தில் மூழ்கியுள்ள யெமனின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி யெமனை சீஆ நாடாக மாற்றும் வியூகத்தை ஈரான் வரைந்தது. யுத்த விமானங்கள், கனரக ஆயுதங்கள், பண உதவி எல்லாம் கொடுத்து மிகச்சிறிய தொகையினரான ஹோஸிகளை தூண்டிவிட்டது ஈரான்.

யெமனின் கொள்கை ரீதியான மக்கட் பரம்பல் இது: சாபிஈ மத்ஹபினர் 65%, ஹம்பலி மத்ஹபினர் 5%, மிதவாத ஸுன்னி சார்பு சீஆ ஸைதியாக்கள் 25%, ஹோஸி சீஆக்கள் 2%, மற்ற கலப்பு பிரிவினர்கள் 3%. இதிலிருந்து ஈரானின் ஆயுத உதவியுடன் யெமனைக் கைப்பற்ற யுத்தம் செய்யும் ஹோஸிகள் வெறும் 2% ஆன மிக அற்பத் தொகையினரே என்பது புரிகிறது அல்லவா? ஸுன்னி சார்பு மிதவாத ஸைதியாக்களையும் சேர்த்தால் 95% ஸுன்னி முஸ்லிம்களும் வெறும் 2% ஹோஸிகளும் என்பது புலப்படுகின்றது.
(பார்க்க:  http://www.almouazeen.com/showthread.php?t=20974 )

இவ்வாறு பெரும்பான்மையாக உள்ள ஸுன்னிகளையும் ஹோஸிகள் தாக்கியதால் ஸுன்னிகளும் ஹோஸிகளுக்கு எதிராக கிளம்பினர். பல ஸுன்னி மஸ்ஜித்களை ஹோஸிகள் கைப்பற்றி அவற்றில் கடமையில் இருந்த கதீப்மார்களை விரட்டிவிட்டு, சீஆ கதீப்மார்களை நியமித்தனர்.




No comments:

Post a Comment