Tuesday, January 19, 2016

குத்பு நாயகம் என்றால் ......

இது குத்பு நாயகம் அவர்களுடைய மாதம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து மக்கள் அதிலும் குறிப்பாக காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மனாகிபுகளில் வாசித்து அவர்கள் பால் மஹப்பத்தை அதிகரித்துக்கொள்ளும் மாதம்.

قطب الاقطاب غوث الأعظم محيي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز رضي الله عنه
"குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் - ரழியல்லாஹு அன்ஹு"

இது எல்லா உலமாக்களும் குத்பு நாயகத்தைப் பற்றிய பயான்களில் அடிக்கடி உபயோகிக்கக் கூடிய ஒரு சொற்றொடர். சரி இதன் பொருள் என்ன என்று சிந்தித்தீர்களா?

புவியியல் பாடத்தில் நீள் கோடுகள் என்று இருக்கின்றன அல்லவா? அக்கோடுகள் எல்லாம் வட – தென் துருவங்களில் ஒரே இடத்தில் ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும் இடத்துக்கு வட துருவம், தென் துருவம் என்று பெயர். அரபியில் குத்பு ( قطب ) என்று சொல்லப்படும்.

அதே மாதிரி உலகில் உள்ள எல்லா அவ்லியாக்களும் ஒரு வலியுல்லாஹ்வின் ஆத்மீக ஆட்சியின் கீழ் ஒன்று சேர்வார்கள். அவர் அந்த எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பார். எனவே அவருக்கு ஆத்மீக பரிபாசையில் "குத்பு" என்று பெயர்.

அப்படியாக எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பவருக்கு "குத்பு" என்றும், அந்த "குத்புமார்கள்" அனைவருக்கும் தலைவராக இருப்பவருக்கே  "குத்புல் அக்தாப்" (قطب الاقطاب) என்றும் பெயர்.

"கௌதுல் அஃழம்" (غوث الأعظم) என்றால் பொருள் என்ன ?
"கௌது"  (غوث) என்றால் "இரட்சிப்பவர்" என்பது பொருள். அதாவது : "பாதுகாப்பவர்" என்று தற்கால இலகு நடையில் கூறலாம். பிள்ளைகளை பெற்றோர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதில்லையா? மாணவர்களை ஆசிரியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து ஜனாதிபதி "பாதுகாக்கிறார்" என்றும், நோயாளிகளை நோயிலிருந்து வைத்தியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், கூறுவது எல்லோரும் அறிந்த மொழி வழக்கு அல்லவா?
நபிமார்களும் அவ்லியாக்களும் குப்ரு, சிர்க்கு, பாவங்களில் நின்றும் மனித இனத்தை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதும் சர்வ சாதாரணமாக அனைவரும் அறிந்த விடயம்.

எனவே அவ்லியாக்களின் தலைவரான குத்பு நாயகம் அவர்களும் மனிதர்களை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவது மிகவும் தெளிவான மொழி நடை அல்லவா? இதனை அரபு மொழியில்  ( غوث ) என்கிறோம். ஏற்கனவே கூறிய விதம் அவர்கள் எல்லா குத்புமார்களுக்கும் தலைவராக இருப்பதால்  (غوث الأعظم) என்று கூறுகிறோம். (الأعظم) என்றால், வலுப்பமான, மகத்துவமான, பெரிய, மேலான எனப் பொருள்படும். எனவே "பாதுகாப்பவர்களில் மிகவும் மேலானவர்கள்" என்பது இதன் பொருள். மொழி ரீதியாக சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.

"முஹ்யித்தீன்" (محيي الدين) என்றால், அவர்கள் தீனுல் இஸ்லாத்தை ஹயாத்தாக்கியவர்கள் என்று பொருள். மார்க்கத்தை ஹயாத்தாக்கிய நான்கு கலீபாக்கள், ஹனபி, மாலிக்கி, சாபிஈ, ஹன்பலி, புகாரி, முஸ்லிம், அபூ தாவுத், மாதுரீதி, அஷ்அரி இன்னும் உள்ள ஏராளமான இமாம்களுக்கும் இச்சொல் பொருந்தும். எனினும், குத்பு நாயகம் அவர்களின் காலத்தில் ஆத்மீக துறையில் ஏராளமான தவறான கருத்துக்களும் வழிகேடுகளும்  நிறைந்திருந்து, அவற்றை அவர்கள் நீக்கி, எல்லா அவ்லியாக்களின் ஆத்மீக பாதைகளையும் ஒன்றிணைத்ததால் அவர்களுக்கு "முஹ்யித்தீன்" என்ற பெயர் நிலைத்து நின்றது. அல்லாஹு தஆலா அக்கால ஸாலிஹீன்களின் மனதில் அந்த உணர்வைப் போட்டதன் காரணமாக அவர்கள் குத்பு நாயகத்தை அவ்வாறு அழைக்கலானார்கள்.

அப்துல் காதிர் (عبد القادر) என்பது அவர்களின் இயற் பெயர். தத்துவம் (சக்தி) உள்ள அல்லாஹ்வின் அடியான் என்பது அதன் பொருள். இப்போதும் இப்பெயரைத் தாங்கிய ஏராளம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

"ஜீலானி" (الجيلاني) என்பது, அவர்கள் பாரசீக நாட்டில் "ஜீலான்" என்ற ஊரில் பிறந்ததால் இவ்விதம் அழைக்கப் படுகிறார்கள்.

"கத்தஸல்லாஹு" (قدس الله) என்றால், அல்லாஹ் அவர்களை கௌரவிப்பானாக, தூய்மைப் படுத்துவானாக, பரக்கத்து செய்வானாக என்பது பொருள். ரஸூலுல்லாஹ் மீது ஸலவாத்து சொல்வது போன்று, ஸஹாபாக்கள் மீது " ரழியல்லாஹு அன்ஹு" (அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று கூறுவது போன்று, குத்பு நாயகம் அவர்களுக்கும் ஏனைய அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆக் கேட்பது ஆன்மீக வழக்கு. "ஸிர்ரஹு"  (سره) என்றால் அவர்களின் ரகசியத்தை, யதார்த்தத்தை , அகமியத்தை என்பது பொருள். எனவே குத்பு நாயகம் அவர்களின் அகமியத்தை பரக்கத்தானதாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆக் கேட்பதே இது. " அல் அஸீஸ்"  (العزيز) என்றால், வலுப்பமான, மகத்துவமான என்பது பொருள். ஆக, "அவர்களுடைய மகத்துவமான அகமியத்தை பரக்கத்தானதாக ஆக்குவாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்கும் துஆ தான் இது. இதில் என்ன விளங்காத புதிர் இருக்கிறது ?

"ரழியல்லாஹு அன்ஹு" (رضي الله عنه) என்றால் அவர்களைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக  என்பது அர்த்தம். ஸஹாபாக்களுக்கும், பெரும் அவ்லியாக்களுக்கும் இப்படி துஆ கேட்பது இஸ்லாமிய உலக வழக்கு. அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்று முஸ்லிம் உம்மத்து யாரைப் பற்றி நம்புகிறார்களோ அவர்களுக்கு இவ்வாறு துஆ கேட்பது முஸ்லிம்களின் வழக்கம்.

எனவே நாமும்  குத்பு நாயகம் அவர்களை இவ்வாறு புகழ்ந்து, அல்லாஹ்விடம் துஆக் கேட்டு, அதன் பரக்கத்தையும் அவர்களின் நேசத்தையும் பெற்றுக் கொள்வோமாக.
19.1.2016


No comments:

Post a Comment