பயானும் அஜீரணமும் இடவசதியும்
அல்லாஹ்வின் கிருபையால் , இலங்கையில் பல கோணத்திலும் உறுதியான மார்க்க அறிவின் Centre ஆக திகழும் கஹடோவிட அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில், 27.1.2016 இல் நடந்த எனது பயான் பலருக்கு அஜீரணமாக இருக்கிறது.
இது ஒன்றும் "வாய் தவறி" பேசிப்பட்டதல்ல. பல நாட்களாக எழுதி, பார்த்து பேசியது. 16 வருடங்களாக பாத்தில்கார சதிகாரர்கள் இஸ்லாத்தை அழிப்பதை 25 – 30 கொப்பிகளில் எழுதி வைத்திருப்பதில் இருந்து மிகவும் சுருக்கமாக தொகுத்தெடுத்து, திட்டமிட்டு பேசியது.
கடந்த பதினாறு வருடங்களில் பாத்தில்கார அநியாயக் காரரை எதிர்த்து, பல இடங்களில் இப்படியான பயான்கள் பேசி, அதனால் எம்முடன் இருந்த இன்னும் பலர் எம்மை விட்டும் ஓரமான பல அனுபவங்களை நன்கு அனுபவத்தில் அறிந்திருந்த நிலையில், திட்டமிட்டு பேசியது இது. எனவே "தெரியாமல் பேசிப்பட்டது" என்ற பேச்சுக்கே இடமில்லை. எமக்குத் தேவை Quanity அல்ல, Quality.
சிலர் கூறலாம் இப்படி : என்ன இருந்தாலும் மார்க்க பயான் என்று அழைத்து இப்படி பேசினதால் பலர் இனி பயான்களுக்கு வர மாட்டார்களே என்று. உண்மை தான். எமக்கு தெரிந்த விசயம் தான்.
"பலர்" என்கிறீர்களே, யார் அந்தப் "பலர்"?
நுவரெலியாவில் நீங்கள் காணி வாங்கி, 10 பேரை அழைத்துப் போகிறீர்கள் விவசாயம் செய்து எல்லோரும் அதிக லாபம் பெறலாம் என்று கூறி. போய்ப்பார்த்தால் புற்பூண்டுகள் அதிகம். அவற்றையெல்லாம் களைந்து நீக்கிய பிறகே விவசாயம் செய்ய வேண்டும் என்கிறீர்கள். "எமக்கெல்லாம் காடு வெளிசாக்க முடியாது. அதற்கு நாம் வரவில்லை. நாம் வந்தது கிழங்கு நட்டி ஆதாயம் பெறத்தான்" என்று கூறி ஏழு பேர் உங்களை விட்டும் பிரிந்து ஊர் போகிறார்கள். அந்த 7 பேர் தானே அந்த "பலர்"?
10 பேர் உங்களுடன் காட்டுக்கு போகிறார்கள் மான் வேட்டையாட. காட்டில் உங்களுக்கு ஆபத்து ஒன்று ஏற்படுகிறது. மற்றவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. "வேட்டை கீட்டை ஒன்றும் வேண்டாம். நாம் போகிறோம் வீட்டுக்கு" என்று உங்களை அந்த ஆபத்தில் விட்டுவிட்டு ஏழு பேர் திரும்பி விடுகிறார்கள். அந்த 7 பேரும் தானே நீங்கள் முன்பு கூறிய அந்த "பலர்"?
"அன்பான நண்பனை ஆபத்தில் அறி" என்று நான் பாடசாலையில் படித்தது, பரீட்சை எழுதுவதற்கு அல்ல. அதன் படி வாழ்வதற்கு.
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நற்பு" என்று நான் படித்தது, துன்பம் வரும் போது எம்முடன் இருப்பவர்கள் மட்டுமே உண்மை நண்பர்கள் என்பதை அறிவதற்காக.
ஒரு பணக்காரனின் வீட்டில் தினமும் ஏகப்பட்ட கூட்டளிகளாம். மனைவிக்கு தேனீர் ஊற்றி முடிந்த பாடில்லை. இவர்களில் அனேகர் சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்பதை பணக்காரனின் மனைவி இனம் கண்டு, பல முறை கணவனிடம் கூறியும் கணவன் நம்புவதே யில்லை. மனைவி துணிவுடன் ஒரு நாள் கூறினாள் : நான் சொல்வதை நீங்கள் அறிய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு வேலை செய்யுங்கள்.
நீங்கள் இன்று மிகவும் கலங்கிப் போய், பயத்தில் இருப்பது போல் நண்பர்களிடம் நடியுங்கள். நான் சொல்லித் தருவது போல் அவர்களிடம் சொல்லுங்கள் என்று செய்ய வேண்டியதை மனைவி சொல்லிக் கொடுத்தாள்.
அவர்கள் மிக்க அன்போடு கேட்பார்கள், "என்ன துரை உங்களுக்கு இன்று நடந்தது" என்று. நீங்கள் சொல்லுங்கள், இரவு வீட்டுக்கு ஒரு திருடன் வந்தான். அடித்தேன். அவன் இறந்து விட்டான். இப்போது செய்தி பரவினால் பொலிஸில் நான் மாட்டி விடுவேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று பிரலாபித்தார்.
மனைவியின் திட்டப்படி, மாவால் ஒரு சவம் மாதிரி செய்து, இரத்தம் பூசி, புடவையால் மூடி வைத்திருந்த ஒன்றை இலேசாக காட்டினார்.
காட்டில் கொண்டு போய் புதைப் போம் என்றார் ஒரு நண்பன். போகின்ற வழியில் யாராவது கண்டால் பொலிஸுக்கு அறிவிப்பான். எனவே அது முடியாது என்றான் பணக்காரன்.
வீட்டின் உள்ளே புதைப்போம் என்றான் ஒரு நண்பன். சீ சவம் புதைத்த வீட்டில் வாழ முடியுமா என்று மறுத்தான் பணக்காரன்.
சரி, நீங்களே சொல்லுங்களேன் என்றனர். "நாம் எல்லாம் சேர்ந்து சவத்தை சாப்பிட்டு முடிப்போம். ஆயின் வெளியில் ஒருவருக்கும் தெரிய வராது" என்றான் பணக்காரன்.
"அன்பான ஆப்த" நண்பர்களின் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்தனர். ஆளுக்காள் சொல்லாமலேயே வீட்டை விட்டு நடையைக் கட்டினர். ஒரு நண்பர் மட்டும் நின்றார். பணக்காரன் கேட்டான், நீ ஏன் போகவில்லை?
அவன் சொன்னான், "நான் போனால் உங்கள் நிலைமை என்ன? உங்கள் யோசனைப்படி சவத்தை சாப்பிட்டு முடிப்போம்" என்றான்.
உடனே பணக்காரன் அவனை உள்ளே அழைத்துப் போய், சவம் அல்ல, அது வெறும் மாவு தான் என்பதைக் காட்டி, இன்று முதல் நீ மட்டும் தான் எனது நண்பன். மற்றவர்கள் இப்பக்கம் வர மாட்டார்கள் என்றான்.
அது மாதிரி, ஊருக்கும், நாட்டுக்கும், வசதி கிடைத்தால் உலகத்துக்கே "ஸுவர்க்க வழி இது தான். எந்த பித்அத்து என்றாலும் அதை உறுதியான ஆதாரத்தால் அல்லாஹ் கிருபையால் முறியடித்துக் காட்ட தயார் நிலையில்" வந்து, வெறும் மூன்று வருடங்களில் முழு இலங்கையிலும் நிரூபித்துக்காட்டி, உங்களுக்கு "ஆ… நிம்மதியாக எமது தரீக்காக்களில் இருந்து ஸுவர்க்கம் போகலாம். எவரின் குர்ஆன் ஹதீஸ் வாதத்துக்கும் பயப்படத் தேவையில்லை"என்ற நிலையை உருவாக்கி, அந்த மூன்று வருடங்களிலும் எந்த பத்திரிகையிலும், எந்த ரேடியோவிலும் எந்த ஒரு வஹாபி பேச்சும் வராமல் தடை செய்து, வஹாபித் தலைவர்களை ஓடியொழிக்கச் செய்து, உங்களுக்கு நிம்மதியாகவும், மிக உறுதியான ஆதாரங்களும் தந்த எமக்கு, சதிகாரரால் ஆபத்து ஏற்பட்டவுடன், கோடை காலத்தில் இரப்பர் மரத்தில் இருந்து இலைகள் உதிர்வது போன்று அதிகம் பேர் எம்மை விட்டும் நீங்கி தலைமறைவாகி ட்டனர்.
சோதனைக்கு மேல் சோதனை வந்தது. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "أشد الناس بلاء الأنبياء، ثم الصالحون، ثم الأمثل فالأمثل"
"கடுமையான சோதனை நபிமாருக்கு. அதற்கடுத்து, ஸாலிஹீன்களுக்கு. அதற்கடுத்து அதற்கடுத்த தரத்தில் உள்ளவர்களுக்கு" என்பதாக.
எனவே மார்க்க அறிவுக்காக மட்டும் எம்மை மஹப்பத்து வைத்த உண்மையான நண்பர்கள், எங்கு போனாலும் இந்த அறிவு கிடைக்காது என்பதை உணர்ந்து, சகல சோதனைகளிலும் எம்முடனேயே இருந்தனர். "ஹக்காளரும் வேண்டும் ஹக்கை அழிக்கும் பாத்தில் காரரும் வேண்டும்" என்று இருந்தோர், எம்முடன் இருக்க முடியாமல் நழுவி விட்டார்கள்.
அல்லாஹு தஆலா கூறுகிறான் :
{ الم* أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لا يُفْتَنُونَ* وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ } [العنكبوت: 1 -3]
"நாங்கள் ஈமான் கொண்டோம்" என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? " (29:1-3)
{ أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (البقرة214) }
"முஃமீன்களே !) உங்களுக்க முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை, உங்களுக்க வராமலே நீங்கள் ஸுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? ரஸூலையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும், கஷ்டங்களும் தன்பங்களும் பீடித்து, (அவர்கள் வருந்தி தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) 'அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?) என்று கேட்டதற்கு, 'அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது," என்று (நாம் , ஆறுதல்) கூறும் வரையில், அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்." (2:214)
சிலர் நினைப்பது போல், சில வணக்கங்களை மட்டும் கூறுவதல்ல குர்ஆன் என்பது. பாத்தில் காரரை எதிர்த்துப் போராடும் போரட்டக் கலையையும் எமக்கு போதிக்கிறது.
முஸ்லிம்கட்கு சொந்தமானது பலஸ்தீனும் மஸ்ஜிதுல் அக்ஸாவும். முஸ்லிம்களை விரட்டிவிட்டு, யஹூதிகள் அங்கே அட்டூழிய பாத்தில் ஆட்சி நடாத்துகிறார்கள். விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குவைத், ஸவூதி, துபாய் போன்ற நாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். ஆனால் பலஸ்தீனுக்காக எழுபது (70) வருடங்களாக போராடுகிறார்கள். அல்லாஹ் ரஸூலின் கட்டளையும், பாத்தில்கார யஹூதிகளிலிருந்து முஸ்லிம்கள் பலஸ்தீனை மீட்க வேண்டும் என்பதே.
"சரி தான். இது விதி. நாம் இஸ்ரேலை எதிர்ப்பது தவறு. நாம் பணக்கார நாடுகளில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுப் போவோம்" என்று சும்மா இருக்கவோ, இஸ்ரேலுடன் சேர்ந்து போகவோ குர்ஆனிலோ ஹதீஸிலோ எங்குமே கூறப்படவில்லை. முஸ்லிம்கள் பலஸ்தீனை மீட்க வேண்டும். அல்லாஹ்வின் ஹக்கை அங்கு நிலை நாட்ட வேண்டும். இதுவே குர்ஆன் ஹதீஸின் கட்டளை. இதே நிலை தான் தக்கியாவும் நாமும் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகிறோம்.
ஒரு ஜோக் : எமது பயானுக்கு 27.1.16 இல் மத்ரஸா கட்டடம் இடம் கொடுக்க வில்லை. பலர் வெளியிலும் இருந்தார்கள். இன்ஷா அல்லாஹ், எமது அடுத்த பயான், "வஹ்ததுல் வுஜூத் என்ற முக மூடியில் உள்ள அத்துவித குப்ரிய்யத்து" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. அனைவரும் அறிய வேண்டிய மிக முக்கிய விடயம். இதற்கு வெளியூர்களில் இருந்தும் பலர் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்தால், அவர்களுக்கு இருக்க அறவே இடம் போதாது. எனவே சென்ற பயானைக் கேட்டு அலர்ஜி ஆனவர்கள் வராமல் இருந்தால், இடவசதியை சமாளிக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள். 2.3.2016
No comments:
Post a Comment