Monday, February 8, 2016

2016 ஆம் ஆண்டின் மாபெரும் யுத்தம் ?

ஸவூதி அரேபியாவின் வட பகுதியில் உள்ள "ஹுப்fருல் பாத்தின்" என்ற இடத்தில் உலகின் பல அரபு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 3,50,000 துருப்புக்களை குவித்து மாபெரும் இராணுவ ஒத்திகையொன்றை இன்னும் ஒரு சில நாட்களில் நடாத்த ஸவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
                வளைகுடா நாடுகள், எகிப்து, சூடான், பாகிஸ்தான், ஜோர்டான், இன்னும் பல நாடுகள் இன்னும் பல நாடுகளின் துருப்புக்களை அனுப்பும்படி ஸவூதி கேட்டுள்ளது. எமிரேட் முதன் முதலாக அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நோக்கம் என்ன ?
இவ்வளவு பெரிய இராணுவ படையொன்றை துருக்கி அல்லது ஜோர்டான் ஊடாக ஸிரியாவுக்கு அனுப்பி, ஸிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் தாஇஷை ISIS முற்றாக அழிப்பதும், அங்குள்ள ஏனைய போராளிகளைப் பலப்படுத்தி ஈரான், ஹிஸ்புல்லாஹ், ரஷ்யாவின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள பஷார் அல் அஸாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதும் தான் ஸவூதியின் பிரதான நோக்கங்கள். ஸவூதி தலைமையிலான இப்படைகள் மேற்கு நாடுகளுடன் இணைந்தே இந்த யுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
சந்தேகங்கள் :
                ஆயுத பலத்தில் மிகப் பலவீனமான நாடான யெமனில் ஸவூதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் கடந்த ஒரு வருட காலமாக யுத்தம் செய்தும் கூட, ஓரளவு வெற்றிகள் பெற்றாலும், ஈரானின் உதவியுடன் போராடும் யெமன் சீஆ (ஹூஸி) படைகளை இன்னமும் ஸவூதியால் முற்றாக அழித்து வெற்றிவாகை சூட முடியாமல் இருக்கிறது. தற்போது அரபு நாடுகளின் படைகள் யெமன் ஸன்ஆவுக்கு அருகில் முன்னேறி வந்துள்ளன. ஆனால் இன்னும் யுத்தம் முடிந்த பாடில்லை.
                இந்நிலையில் பலம் மிக்க ஸிரியாப் படைகளை, அதுவும் ஹிஸ்புல்லாஹ், ஈரான், வல்லரசான ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் அஸாதை முறியடிக்க ஸவூதியால் முடியுமா என்பது ஒரு கேள்வி. எப்படியோ அஸாதை நீக்கி ஸவூதி ஆதரவான ஆட்சியை அமைப்பதே அமெரிக்காவினதும் தேவை.
                ஸவூதி தலைமையில் ஆரம்பிக்க திட்டமிடும் இந்த யுத்தத்தில் ரஷ்யாவும், ஈரானும் ஸவூதியை எதிர்த்து நேரடியாக பங்கு பற்றினால், யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்குமோ சொல்ல முடியாது. ஒரு வேளை ஸவூதி, மற்றும் சில அரபு நாடுகளும் தாக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உருவானாலும் ஆச்சரியம் இல்லை.
                அஸாத் ஆட்சியின் ஒரே நலவு ஸிரியாவை இஸ்ரேலுக்கு எதிரான பலம் மிக்க நாடாக வைத்திருப்பது தான். அஸாதை நீக்கும் முயற்சியின் விளைவாக இராக், லிபியா போன்று ஸிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தி, அதனை பல கூறுகளாக பிரித்து பலவீனப் படுத்தி, இஸ்ரேலைப் பலப்படுத்துவது அமெரிக்காவின் திட்டம்.
                மறுபுறம், ஸுன்னி அரபு நாடுகளை சீஆ நாடுகளாக மாற்றும் ஈரானின் திட்டமும் பயங்கரமானது. ஸுன்னி நாடான இராக்கையும் ஸிரியாவையும், லெபனானையும் ஏற்கனவே ஈரான் தந்திரமான ஆனால் துணிவான திட்டங்கள் மூலம் சீஆ ஆட்சி நாடுகளாக ஈரான் மாற்றி விட்டது.
                எனவே இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது, ஸிரியாவைப் பலமான நாடாக வைத்திருக்கும் அஸாதை ஆதரிக்க வேண்டிய நிலை. ஸுன்னத் வல் ஜமாஅத் அக்கீதாவுடன் ஒப்பிடும் போது சீஆ வழிகேட்டை பரப்பி ஸுன்னி நாடுகளை ஈரானின் ஆதிக்கத்துள் கொண்டுவரும் ஆபத்தை நோக்கினால் அஸாதை ஆதரிக்க முடியாது.
                மறுபுறம் இன்னொரு கேள்வி : ஸவூதி தலைமையிலான சக்திகள் ஸிரியாவில் வெற்றி பெற்றால் அங்கு வஹாபியத்தின் பலம் ஓங்கிவிடும் என்ற ஆபத்தும் இல்லாமலில்லை. எனினும் தாஇஷ் என்ற பயங்கர மிருகக் கூட்டம் உருவானது வஹாபி கொள்கையால் தான், தாஇஷின் அக்கீதா கொள்கைகள் முழுக்க முழுக்க வஹாபிக் கொள்கையே என்பதையும், தாஇஷ்களால் தமது ஆட்சிக்கே ஆபத்து என்பதையும் உணர்ந்த (கட்டாரைத் தவிர்ந்த) அத்தனை அரபு நாடுகளும், இப்போது வஹாபிக் கொள்கையை தமது நாடுகளில் இருந்து வேறோடு பிடுங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஸவூதியிலும் வஹாபி பிரச்சாரங்கள் உளவுத் துறையால் கண்காணிக்கப் படுகின்றன. குவைத்தில் சகல லைப்ரரிகளில் இருந்தும் வஹாபி நூல்களை அகற்றும் வேலை ஏற்னவே அரம்பிக்கப் பட்டுள்ளது. எந்த வஹாபி இயக்கமும் முன்னர் போல் பண வசூலில் சதந்திரமாக அங்க ஈடுபட முடியாது தடை செய்யப்பட்டுள்ளன. குத்பா மிம்பர்களில் வஹாபி ஆதரவாக பேசிய பல வெளிநாட்டு கதீப்மார்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்கள்.
                வஹாபிக் கொள்கையை முற்றாக அழிப்பது இந்த அரபு நாடுகளின் நோக்கமா, அல்லது, தமது பதவிகளுக்கு தாஇஷ் போன்ற பயங்கரவாதிகளால் ஆபத்து வராமல் தடுப்பது மட்டுமா என்பதும் ஒரு கேள்வி.
                வஹாபியத்தை இவ்விதமாக அழிக்கும் வேலைகள் சகல அரபு நாடுகளிலும் முன்னெடுக்கப் படுமானால், அதே கையோடு சீஆ சார்பு ஸிரிய ஜனாதிபதியும் நீக்கப்பட்டு வேறு தலைவர் வருவது நல்லது தான். ஆனால் ஸிரியாவை இராக், லிபியா போன்று குட்டிச் சுவராக்கும் அமெரிக்க திட்டத்தை ஸவூதி தலைமையிலான அரபு நாடுகளால் முறியடிக்க முடியுமா என்பது தான் பிரதான கேள்வி.
                அத்துடன் ஸவூதி ஆதரிக்கும் ஸிரியாவில் உள்ள அஸதுக்கு எதிரான படைகளும் வஹாபி கொள்கையால் போஷிக்கப்பட்டவர்களே என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே எந்தப் பக்கம் திரும்பினாலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று அனாதரவான , குறைந்துகொண்டே போகும், "பரதேசி" ( الغرباء ) நிலையை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது. لا حول ولا قوة إلا بالله
8.2.2016

No comments:

Post a Comment